`கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார்; தமிழிசை சர்க்கரை கொடுத்து கொல்கிறார்'- நாராயணசாமி

`கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார்; தமிழிசை சர்க்கரை கொடுத்து கொல்கிறார்'- நாராயணசாமி

"கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார். ஆனால் தமிழிசை சவுந்தர்ராஜன் சர்க்கரை கொடுத்து கொன்று வருகிறார்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மாநில அந்தஸ்து கேட்டு டெல்லிக்கு சென்றோம். அப்போது என்ஆர்காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தவிர அனைத்து கட்சியினரும் வந்தார்கள். அதையும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அதோடு அல்லாமல், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இருந்தபோது எங்கள் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து எங்களுடைய கோப்புகளை எல்லாம் திருப்பி அனுப்பும்போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தவர்தான் ரங்கசாமி. அது மட்டுமல்ல, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அவர் பலமுறை எங்களுடைய நிர்வாகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் நடக்க இருக்காமல் இருப்பதற்கு கிரண்பேடியோடு தொடர்பு கொண்டு அதையெல்லாம் தடுத்து நிறுத்தினார்.

2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது என்ஆர் காங்கிரஸ் கட்சியினுடைய முதல் கோரிக்கை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தான். இப்போது அவர்கள் இரண்டு ஆண்டு முடிக்கப் போகிறார்கள். தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு வரும்போது அவர்களின் கோரிக்கையை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார். அதுவும் நடைபெறவில்லை. அதுவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதோடு அவர் வேலை முடிந்துவிட்டது. அதன் பின்னர் மத்திய அரசுக்கு இவர் என்ன அழுத்தம் கொடுத்தார். இவர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினாரா? அவர்களின் ஆதரவை கேட்டாரா? அல்லது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டாரா? இவர் புலம்புவதற்கு பின்னணி என்ன?

அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுகிறார். நானும் முதல்வரும் இணைந்து செயல்படுகிறோம். நிர்வாகத்தில் தலையிட தலையீடு இல்லை என்று துணை ஆளுநர் தமிழிசை பகிரங்கமாக சொல்கிறார். முதலமைச்சர் அதிகாரிகளை குறை கூறுகிறார். இதில் எது உண்மை. துணைநிலை ஆளுநர் முதலமைச்சர் தனது கருத்தை சுதந்திரமாக பேசுகிறார் என்று அவரை கிண்டல் அடிக்கிறார். இது போன்ற கொள்கை இல்லாத, தாங்கள் எடுத்த கொள்கையை நிறைவேற்ற முடியாத அரசு புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது. கிரண்பேடி விஷத்தை வைத்து கொல்வார். ஆனால் தமிழிசை சவுந்தர்ராஜன் சர்க்கரை கொடுத்து கொன்று வருகிறார்.

இரண்டு ஆண்டு கால ஆட்சியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். ஒன்றும் இல்லை. புலம்புவதால் என்ன பிரயோஜனம் உண்டு. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தீர்களா. மத்திய அரசை எதிர்த்து எங்களை போல போராடுவதற்கு உங்களுக்கு தெம்பு இருக்கிறதா திராணி இருக்கிறதா? மத்திய அரசுக்கு அடி பணிந்து கொண்டு ரங்கசாமி ஒரு பொம்மை ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் செயல்படுகிறார். ரங்கசாமியால் தனது அமைச்சரவை எடுத்த முடிவைகூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் மத்திய அரசை எதிர்த்து மாநில அந்தஸ்து பெற போராடுவதற்கு அவர் தயாரா? மொத்தத்தில் ரங்கசாமி முதலமைச்சராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர்" என்றார் காட்டமாக.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in