பாஜகவுக்கு தெற்கிலிருந்து ஆரம்பிக்கிறது அஸ்தமனம்! - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

நாராயணசாமி
நாராயணசாமி

ஆளும் பாஜகவுக்கு தெற்கிலிருந்து அஸ்தமனம் ஆரம்பமாக உள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி தெரிவித்துள்ளார். முதல்கட்ட  மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்திருந்த நிலையில் மக்களவைத் தேர்தல் கள நிலவரம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் உரையாடினோம். 

புதுச்சேரி தொகுதியில் வெற்றி யாருக்கு?  

புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. காரணம், பிரதமர் மோடி புதுச்சேரிக்கு சொன்ன எதையும் செய்து தரவில்லை என்ற வெறுப்பு மக்களிடம் இருக்கிறது.  தற்போதைய கூட்டணி ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருக்கிற பாஜக வேட்பாளரான நமசிவாயமும் எந்த திட்டத்தையும் புதுச்சேரிக்கு கொண்டு வரவில்லை.   

நமசிவாயம் கல்வித்துறை, மின்துறை, தொழில்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்த துறைகளிலும் அவர் எதையும் சாதிக்கவில்லை. எந்த தொழிற்சாலைகளும் புதிதாக வரவில்லை.  பாலாறும் தேனாறும்  ஓடும் என்று சொன்னார்கள். ’பார்’களை திறந்து சாராயம்தான் ஆறாக ஓடுகிறது. இங்கேயே அவர் எதையும் செய்யாத போது நாடாளுமன்றம் சென்று என்ன செய்து விடப்போகிறார் என்ற கேள்வி மக்களிடம் உள்ளது. அதனால் காங்கிரஸ் அமோக வெற்றிபெறுவது உறுதி.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கடந்த 5 ஆண்டுகளில் புதுச்சேரிக்காக என்ன சாதித்திருக்கிறார்?

மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பி நல்ல தீர்வு கண்டிருக்கிறார்.  நெடுஞ்சாலை திட்டங்கள், ரயில்வே பணிகள், புதிய ரயில்கள் என நிறையச் சாதித்துள்ளார். ஏற்கெனவே எம்எல்ஏ-வாக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, முதலமைச்சராக பல பதவிகளில் இருந்து மக்களுக்கு பணியாற்றிய அனுபவம் கொண்டவர் வைத்திலிங்கம் என்பதால் மக்களின் தேவைகளை புரிந்து செயலாற்றி வருகிறார்.

 தமிழக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்? 

அது ஏற்கெனவே எழுதப்பட்ட தீர்ப்பு.  39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெல்லும். அதற்குக் காரணம், மத்திய பாஜக அரசு மீது இருக்கிற வெறுப்பு. பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் ஒரு பைசாவைக்கூட கொடுக்காத மோடி மீது தமிழக மக்கள் கோபமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து வரியை வசூலித்துக்கொண்டு, அதிலிருந்து ரூபாய்க்கு  29 பைசாவை மட்டுமே திருப்பித் தருவதும், அதுவே உத்தரப்பிரதேசத்திற்கு ஒரு ரூபாய்க்கு இரண்டரை ரூபாய் தருவதும் மக்களுக்கு தெரிந்திருக்கிறது.

சமூக நீதிக்கு எதிரானது பாஜக. தமிழ்நாட்டுக்கு பத்தாயிரம் கோடி கொடுத்ததாக பொய்யான தகவலைச் சொல்லுகிறார்கள். எந்தவகையில் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. ஆளுநராக ஒருவரை நியமித்து தமிழ்நாட்டுக்கு அவர்கள் கொடுக்கும் இடைஞ்சல்கள் அத்தனையையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; புரிந்து கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மக்கள் மனதில் ஆழப்பதிந்து அவை திமுகவுக்கு ஆதரவான வாக்குகளாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

400 இடங்களைப் பிடிப்போம் என்று பாஜக கூறுகிறதே?

2019-ல் மோடி மிகவும் செல்வாக்குள்ள நபராக இருந்தபோதே பாஜக 303 தொகுதிகளைத் தாண்டவில்லை. இன்றைக்கு மோடியின் அந்தப் பிம்பம் சிதைந்து போய்விட்டது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு,  கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை சரிசெய்ய இந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.  நாட்டை 2047 நோக்கி கொண்டு செல்வேன் என்கிறார் மோடி. அதை எல்லாம் பார்க்க நாடும், நாட்டு மக்களும் இருக்க வேண்டாமா? 

இந்த பத்தாண்டுகளில் 155 லட்சம் கோடி வெளிநாட்டில் கடனாக வாங்கி இருக்கிறார்கள். காங்கிரசின் 60 ஆண்டு ஆட்சி காலத்தில் 55 லட்சம் கோடிதான் கடன் இருந்தது.  அவர்களால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றியைப் பெறமுடியாது. ஆனால் , தொடர்ந்து பத்து தடவை ஒரு பொய்யை திரும்பத்திரும்பச் சொன்னால் அதை உண்மை என மக்கள் நம்புவார்கள் என்பதற்காக நாங்கள் 400 இடங்களை பிடிப்போம் என பாஜகவினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  

மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள்? 

அதிலென்ன சந்தேகம்..? இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். 

இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? 

நான் எண்ணிக்கையை சொல்ல விரும்பவில்லை.  ஆனால், இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். கடந்த மூன்று மாதங்களாக அதற்கான மிகப்பெரிய மாற்றம் மக்கள் மத்தியில் நடந்துள்ளது. மகத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

அப்படி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர்? 

அதை அந்த நேரத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவெடுப்பார்கள். ஆனால் அதேசமயம், ஒரு காங்கிரஸ்காரனாக என்னுடைய தனிப்பட்ட விருப்பம் ராகுல் காந்தி பிரதமராக அமர வேண்டும் என்பதுதான். இந்தியா முழுவதும் இருக்கிற ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களுடைய விருப்பமும் இதுதான்.  

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முன் நிறுத்தாதது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக இருக்காதா?

இருக்காது. இதுபோன்று பல சமயங்களில் கூட்டணிகளில் பிரதமரை நிறுத்தாமல் தேர்தலை சந்தித்திருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி என்பதுதான் தற்போதைய நோக்கம்.  வெற்றி பெற்றபிறகு கூட்டணிக் கட்சிகள் தலைவர்கள் அமர்ந்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்து கொள்வார்கள்.  

தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்திற்கு பலத்த போட்டி உள்ளதே?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டாவது இடம் அதிமுகவுக்கு தான் கிடைக்கும். பாஜகவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும். 

தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது, அனைவரும் டிடிவி பக்கம் வந்துவிடுவார்கள் என்று அண்ணாமலை கூறி இருக்கிறாரே? 

கூட்டணிக் கட்சிகளை உடைத்து நாசமாக்குவது தான் பாஜகவின் வேலை. ஒவ்வொரு மாநிலத்திலும் இதைச்செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் அதிமுகவை அப்படி உடைத்து மூன்றாக நான்காக பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அவர்கள் நினைப்பது நடக்காது. அதிமுகவை காப்பாற்றும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியே வந்து தனியாக நிற்கிறார். இனி எந்தக் காலத்திலும் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள். அதனால் தப்பித்துக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  பாஜக நினைப்பது நடக்காது. அவர்களின் அஸ்தமனம் தெற்கிலிருந்து தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பமாகிவிட்டது. 

திமுகவை பாஜக நேரடியாக கடுமையாக தாக்குவது ஏன்? 

பாஜகவையும் அதன் தலைவர்களின் தவறுகளையும் நேரடியாக சுட்டிக்காட்டுவது எங்கள் தலைவர் ராகுல் காந்தியும்,  முதல்வர் ஸ்டாலினும்தான். அதனால் அகில இந்திய அளவில் ராகுலை தினம்தோறும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பாஜகவினர் தாக்கிப் பேசுகிறார்கள். அடுத்ததாக முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் தாக்கிப் பேசுகிறார்கள். 

தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று பாஜக நினைத்திருந்தது. அது நடக்கவில்லை, அதனால் திமுக மீது அவர்கள் இவ்வளவு கோபம் காட்டுகிறார்கள். அமைச்சர்களை கைது செய்தாலும் சரி, வழக்குகள் போட்டாலும் சரி, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை என்று அனைத்தையும் வைத்து மிரட்டினாலும் சரி திமுக அசரவில்லை, அதனால் அவர்களுக்கு கோபம் வருகிறது.

உறுதியோடு நின்று முதுகெலும்புள்ள முதலமைச்சராக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார். கிரண்பேடியை வைத்து எனக்கு எப்படி தொல்லை கொடுத்தார்களோ, அதைப்போல அவருக்கும் ஆளுநரை வைத்து தொல்லை கொடுக்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்து நின்று மோடியின் முகத்திரையை  ஸ்டாலின் கிழிக்கிறார். பாஜகவுக்கு திமுக சிம்ம சொப்பனமாக இருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை, தற்போது மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை, தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி விட்டீர்களா? 

என்றைக்கும் மக்களைவிட்டு ஒதுங்குகிறவன் நான் இல்லை. தேர்தலில் கடந்த முறை நின்ற வைத்திலிங்கத்திற்கே இந்த முறையும் வாய்ப்பளிப்பதாக கட்சி மேலிடம் முடிவெடுத்தது. அதனால் நான் போட்டியிட விரும்பவில்லை.  மற்றபடி வாய்ப்பு வரும்போது தேர்தலில் போட்டியிடுவேன்.  அரசியலில் இருந்தும், மக்களை விட்டும்  எப்போதும் விலக முடியாது; நான் விலகவும் மாட்டேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in