அரசியல் தற்கொலை செய்கிறது அதிமுக!

நாஞ்சில் சம்பத் பேட்டி
அரசியல் தற்கொலை செய்கிறது அதிமுக!

தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார், திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். திமுகவில் இருந்து வெளியேறிய காலந்தொட்டு அக்கட்சிக்கு எதிராகத் தன் நாவை வாளாகச் சுழற்றிய நாஞ்சில் சம்பத், சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் திமுகவின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பரப்புரை செய்தார். திராவிட இயக்கங்களின் நலனுக்காகவே எஞ்சியுள்ள வாழ்வு என்று சொல்லும் அவர், 'காமதேனு'வுக்காக அளித்த பேட்டி இது.

பேரறிஞர் அண்ணா விருதுக்கு தமிழக அரசு உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. எப்படியிருக்கிறது இந்த உணர்வு?

தலைதாழ்ந்த நன்றியைத் தமிழ்நாட்டின் முதல்வருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை இந்த விருது பெருமைப்படுத்தியிருக்கிறது. என்னுடைய வீரத்தைக் கொஞ்சம் கூட்டியிருக்கிறது. அண்ணாவை முழுமையாக வாசித்தவன் நான். அண்ணாவுடைய எழுத்துகளால் வசீகரிக்கப்பட்டவன் நான். இந்த விருதுக்கு உரியவனாக இன்னும் என்னை மாற்றிக்கொள்வதற்கும், இந்தச் சித்தாந்தத்தைக் காப்பதற்கும் இன்னும் அதிகமாக உழைப்பேன்.

மதிமுகவில் இருந்து விலகி அதிமுக, அமமுக என்று பயணித்தபோது நீங்கள் கேலிப் பொருளாக்கப்பட்டீர்கள். இந்த விருது உங்களை அந்த அவமானங்களில் இருந்து மீட்கும் என்று நம்புகிறீர்களா?

இடைப்பட்ட காலத்தில் குருட்டு மனப்பான்மையும், இருட்டு இதயமும் உள்ள சில பேர் திட்டமிட்டு என்மீது கல்லெறிந்தார்கள். நான் எப்போதுமே என்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டதில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிறந்தவன் நான். எனக்கும் என் சகோதரர்களுக்கும் கருணாநிதி, சம்பத், ஸ்டாலின், ஜீவா என்றுதான் பெயர் சூட்டினார் என் தந்தை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும். ஆனால், அண்ணன் வைகோவுக்காகக் கலகம் செய்து வெளியேறினேன். அண்ணன் வைகோவின் தலைமையேற்று 19 ஆண்டு காலம் அடக்குமுறைச் சட்டங்களை ருசி பார்த்து இயங்கியவன் நான். வைகோ என்னை நிராகரித்த நிலையில், ஜெயலலிதா எனக்கு அடைக்கலம் தந்தார். அப்போதும் திராவிட இயக்கக் கொள்கைகளையே நான் பேசினேன். ஜெயலலிதா தலைமையை நான் ஏற்றுக்கொண்டிருந்தபோதுதான், நியூயார்க்கில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்தக் காலத்தில்தான் தமிழீழத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தைத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால், அங்கே இருக்கவும், இயங்கவும் சிலர் என்னை அனுமதிக்கவில்லை. நான் பயன்படுத்துவதற்காக ஜெயலலிதா தந்த காரைக்கூடத் திருப்பிக் கேட்டார்கள். வாந்தி எடுத்ததை வாரித் தின்பது நாய்கள் மட்டும்தான். அதை அண்ணா திமுக தலைமை செய்தது. இழிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டியது அவரா அல்லது நானா? அதிமுகவைவிட்டு வெளியேறிய பிறகும்கூட, திராவிட இயக்கத்தை நான் விட்டுக்கொடுத்ததில்லை. தினகரன் தொடங்கிய கட்சிக்கு அம்மா முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டபோது, “கட்சி பெயரில் அண்ணாவும் இல்லை திராவிடமும் இல்லை” என்று சொல்லி வெளியேறியவன் நான். அதற்குப் பிறகு திமுகவில் சேர்வதற்கு எனக்கு அழைப்பு வந்தபோதும்கூட, தொடர்ந்து கட்சி மாறுகிறேன் என்ற பழி என் மீது விழுந்துவிடக் கூடாது என்று பெரியார், அண்ணா சித்தாத்தங்களை எங்கெல்லாம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் பேசலாம் என்று முடிவெடுத்தேன். ஒரு கலாச்சாரப் பாசிஸம் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறபோது, அதை வேரோடு பெயர்த்தெறிய வேண்டிய கடமை எனக்கிருந்த காரணத்தால்தான், நான் அண்ணன் ஸ்டாலினை ஆதரித்தேன். திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தேன். செய்கிறேன். என்னைக் களங்கப்படுத்தியவர்களும், சிறுமைப்படுத்தியவர்களும் இப்போதாவது இந்த நாஞ்சில் சம்பத்தைப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

திராவிடக் கட்சிகளின் மீது அதிருப்தியில் இருப்பவர்களை எல்லாம் பாஜக தொடர்ந்து இழுத்துவருகிறது. அந்த நேரத்தில் உங்களை பாஜகவுக்கு யாருமே அழைக்கவில்லையா?

என்னிடத்தில் வெளிப்படையாகவே அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். “உங்களைப் போன்றவர்கள் வந்தால், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். என்னுடைய மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு ஒரு பெருமை கிடைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் வாருங்கள்” என்றார். எனக்கு அவர் மீது பெரிய மதிப்பு உண்டு. பாஜக என்ற கட்சியில் இருக்கிறார் என்பதற்காக நான் யாரையும் வெறுப்பதில்லை. வாயிலே கூவத்தை வைத்திருக்கிற எச்சில் பயல்களைத்தான் நான் ஏற்க மறுப்பேனே தவிர, பாஜகவில் இருக்கிற மரியாதைக்குரியவர்களை நான் மதிக்கத் தவறியதில்லை. இருந்தாலும்கூட, “என் உடலில் உயிர் இருக்கிற வரையில் பாஜகவை ஏற்கிற மனநிலையில் நான் இல்லை. என்னை விட்டுவிடுங்கள் அண்ணா” என்று அவரிடம் சொல்லிவிட்டேன்.

நீட் விலக்கு மசோதாவைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பிவிட்டாரே?

ஆளுநர் உரையில் நீட் விலக்குக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, அந்தச் சட்டத்தையே திருப்பியனுப்பியிருக்கும் ஆளுநரின் செயல் அருவருக்கத்தக்க நடவடிக்கை. தமிழக மக்களின் உணர்வுகளின் மீது அறிவிக்கப்படாத போர் நடத்துகிறார் ஆளுநர். சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டி இதே மசோதாவைத் திரும்பவும் நிறைவேற்றி, திருப்பி அனுப்பியவருக்கே திருப்பியனுப்ப வேண்டும் தமிழக அரசு. இந்த ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்று உள் துறை அமைச்சரை எச்சரிக்கிறேன்.

தமிழ்நாட்டை பாஜகவால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்ற ராகுல் காந்தியின் மக்களவை பேச்சை ரசித்தீர்களா?

ஆளுமை மிக்க தலைவர் ராகுல்காந்தி, ஆற்றல் மிகுந்த சொற்பொழிவாளராக இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ராகுல் காந்தியை இவ்வளவு காலமும் குறைத்து மதிப்பிட்டவர்கள் அவரது இந்தப் பேச்சைக் கேட்டு பிரமித்துப் போயிருப்பார்கள். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ எனும் பழமொழியை மெய்ப்பித்திருக்கிறார் ராகுல் காந்தி. வரலாற்றில் அவருக்குரிய இடத்தை இந்திய மக்கள் நிச்சயம் தருவார்கள் என்பதை அவரது அந்தப் பேச்சு கொண்டாடப்பட்ட விதமே காட்டுகிறது.

கிறிஸ்தவப் பள்ளிகள் மதமாற்றும் கேந்திரங்களாகச் செயல்படுகின்றன என்று எச்.ராஜா போன்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்களே?

தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய நச்சுக் கிருமிதான் எச்.ராஜா. தமிழ்நாட்டை எப்படியாவது கலவரக் காடாக்கிவிட வேண்டும் என்பது பற்றியே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பவர் அவர். தமிழுக்கும், கல்விக்கும், மருத்துவத்துக்கும் கிறிஸ்தவம் செய்திருக்கிற தொண்டை, பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. ஒரு மாணவியை மதம் மாற்றுவதற்குத்தான் கிறிஸ்தவம் இவ்வளவு கல்வி நிறுவனங்களை நடத்திக்கொண்டிருக்கிறது என்று எவனாவது சொன்னால், அவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்தான் சேர்க்க வேண்டும்.

ஒரு நீதிபதி பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று திமுக எம்பி செந்தில்குமார் மக்களவையிலேயே குற்றம் சாட்டியிருக்கிறார். இப்படி எல்லாம் பேசுவது மரபுதானா?

இப்படி எல்லாம் தீர்ப்பு வழங்கலாமா என்று நான் திருப்பிக் கேட்கிறேன். இந்தியாவினுடைய மரபார்ந்த பெருமைகளை எல்லாம் ஒவ்வொன்றாக குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுகிறது பாஜக அரசு. தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்தையும் தனதாக்கிக் கொள்கிற அயோக்கியத்தனத்தைக் கூச்சமில்லாமல் செய்கிறார்கள். ஆகவே, செந்தில்குமாராவது இதை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறாரே என்று என்னைப் போன்ற ஜனநாயகவாதிகள் ஆறுதலடைகிறோம். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டிய நேரமிது.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அந்த உறவு முறியவில்லை. உண்மையிலேயே முறிந்திருந்தால், எங்களை வஞ்சித்துவிட்டார்கள் என்று பாஜக குற்றம் சாட்டியிருக்க வேண்டும். அப்படியொரு குற்றச்சாட்டை இதுவரைக்கும் பாஜக வைக்கவில்லை. எதிர்காலத்தில் கூட்டணி இருக்கலாம் என்று எட்டுவழிச்சாலை பழனிசாமியும் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்? அதிமுகவை மேலும் கரைத்து பாஜகவில் சேர்ப்பதற்கான நாடகத்தில் ஒரு காட்சி இது. அதிமுகவைச் சேர்ந்த பல பேர் பாஜக வேட்பாளராக களமிறங்குவதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அதிமுகவை இன்னும் பலவீனப்படுத்தி, பல தலைவர்களை இழுக்கப்போகிறது பாஜக. இதெல்லாம் தெரிந்தும், அவர்களின் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லும் அதிமுக தலைமை, அரசியல் தற்கொலை செய்துகொண்டதாகவே நான் கருதுகிறேன்.

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்ப்பதில் காட்டுகிற வேகத்தை, ஆளுங்கட்சியாக செய்ய வேண்டிய கடமைகளில் திமுக காட்டவில்லை என்கிறார்களே?

இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும் எனும் தாகம் ஸ்டாலினுக்கு இருக்கிறது. அவரது முயற்சிக்கு பலர் முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவரது பாதையில் முள் வீசுகிறார்கள். அவர் எடுக்கிற எல்லா நடவடிக்கைகளையும் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அண்ணா தன்னுடைய கடைசி கடிதத்தில் நான் ஒரு சூழ்நிலைக் கைதி என்றார். அப்படித்தான் இன்று அண்ணன் ஸ்டாலின் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார். இதை எல்லாம் தாண்டி அவர் கொண்ட கடமையில் வாகை சூடுவார். அதற்கு எங்களைப் போன்றவர்கள் தோள் தருவோம், தேவைப்பட்டால் உயிரையும் தருவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in