பலவீன அதிமுக... பதம் பார்த்ததா பாஜக?

சர்ச்சையான நயினார் நாகேந்திரன் பேச்சு
திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

’எப்போதும் நிதானமாகவும், பண்பாகவும் பேசும் நயினார் நாகேந்திரனா இப்படிப் பேசினார்?’ என கொதித்துப்போய்க் கிடக்கிறது நெல்லை மண்டல அதிமுக. ‘எங்கள் தயவில் ஜெயித்துவிட்டு எங்களையே சீண்டுவதா?’ என ஏகக் கோபத்தில் இருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். ஆனால் தொண்டர்கள் மட்டத்தில் இருக்கும் இந்தக் கொந்தளிப்பு அதிமுகவின் மேல்மட்ட அளவில் கொஞ்சம்கூட இல்லை. மைக்கைப் பார்த்தாலே மணிக்கணக்கில் பேசும் ஜெயக்குமார்கூட, “அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். இணை ஒருங்கிணைப்பாளரிடமும் அவர் பேசியுள்ளார். அத்துடன் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களின் சிந்தாந்தம், கொள்கை என்பது வேறு. அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களை சீண்டாமல் இருந்தால் போதும்" என்று பட்டும் படாமலும் பேசியிருக்கிறார். வழக்கமான சீற்றம் அவரிடம் இல்லை.

பாஜக போராட்டம்
பாஜக போராட்டம்

‘அதிமுக எதிர்க்கட்சி இல்லை!’

தஞ்சை மாணவி தற்கொலை சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது பாஜக. அதில் மைக் பிடித்த திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “அடுத்த முறை தமிழகத்தில் ஆளக்கூடிய கட்சியாக பாஜகதான் வரும். ஏனென்றால் சட்டமன்றத்தில் தைரியமாக, ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசுக்கூடிய அதிமுகவைப் பார்க்க முடியவில்லை. சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். அதிலும் இருவர் பெண்கள். அண்ணன் எம்.ஆர்.காந்திக்கு 70 வயது தாண்டிவிட்டது. சட்டமன்றத்தில் நாம் பேசினால் மைக்கை கட் செய்துவிடுவார்கள். ஆக, அதிமுக எதிர்க்கட்சி இல்லை. சட்டசபையில் பாஜக பேசாமல் இருந்தாலும், ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில் எதிர்க்கட்சியின் மிகப்பெரிய தலைவராக அண்ணாமலை உருவாகியிருக்கிறார்” என அண்ணாமலைக்குப் புகழாரம் சூட்டினார். பேச்சோடு பேச்சாக அதிமுகவை ஆண்மை இல்லாத கட்சியாகச் சித்தரித்துவிட்டதை, அவர் வேண்டுமென்றே செய்தாரா எதேச்சையாகப் பேசினாரா எனப் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

நயினார் நாகேந்திரனைப் பொறுத்தவரை பரபரப்புக்காக எதுவும் பேசுபவர் அல்ல. பேச்சில் எப்போதுமே நிதானத்தைக் கடைபிடிப்பவர். அந்த மேடையிலும்கூட நயினாரே இதையும் சொல்லிக்கொண்டார். போராட்டத்தில் 17 நிமிடங்கள் பேசியவர், உரையைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, “நான் எப்போதும் நைஸாகத்தான் பேசுவேன். இதனாலேயே ஊடகங்கள் என்னிடம் பேட்டி எடுக்கக்கூட வரமாட்டார்கள். காரணம், அவர்களுக்குப் பரபரப்பாக ஏதாவது பேசவேண்டும். மாநிலத் தலைவருக்கு இளம் வயது, அவர் அப்படிப் பேசுவார். எங்கள் எச்.ராஜாவுக்கு 65 வயது. ஆனாலும்கூட 25 வயது போல் அவரும் பேசுவார். ஆனால் எனக்கு அப்படிப் பேசத் தெரியாது” என வெள்ளந்தியாகப் பேசினார் நயினார் நாகேந்திரன். ஆனால், அவரது பேச்சுத்தான் அரசியல் அதிரடியைப் பற்றவைக்கப் போகிறது என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஇந்து தமிழ் திசை

‘அந்த அர்த்தத்தில் பேசவில்லை!’

நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். “அண்ணன் பேச்சில் பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்தது. அது அதிமுகவை உதாசீனப்படுத்தும் குரல் அல்ல. அது அதிமுகவுக்கு எதிராகப் புரிந்துகொள்ளப்பட்டதாலேயே அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிமுகவினரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்” என்கின்றனர்.

இவ்விவகாரம் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்குவதை உணர்ந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நயினார் நாகேந்திரன் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் நாட்டு நலன்சார்ந்த பல சட்டங்களுக்கு பாஜகவுக்கு, அதிமுக ஆதரவு கொடுத்தது. எங்களுக்குள் கொள்கை ரீதியாக உடன்பாடு இருக்கிறது. இது இயற்கையான உறவு. இவ்விவகாரம் தொடர்பாக நான் எடப்பாடி பழனிசாமியிடம் போனில் பேசி விளக்கிவிட்டேன். ஓபிஎஸ்சையும் தொடர்புகொண்டு வருகிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

‘அதிமுக மீது சின்ன களங்கம் வந்தபோதும் அண்ணாமலை களத்தில் நின்று அதிமுகவுக்கு அனுசரணையாகப் பேசுகிறார்’ என அதிமுகவுக்குள்ளேயே அண்ணாமலை புகழ் பாடுவோரும் இருக்கிறார்கள். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதாலும், இன்னும் அதிமுகவின் தோளில் ஏறி வெற்றிக்கனிகளைப் பறிக்க வேண்டி இருப்பதாலுமே பாஜக, அதிமுகவிடம் விளக்கம் கொடுத்துவருகிறது என உள் அர்த்தம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

களத்தில் இறங்கத் தயங்குகிறதா அதிமுக?

அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது அவர் போயஸ் கார்டனில் இருந்தாலும் சரி... கோடநாட்டில் இருந்தாலும் சரி... தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரில் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கும். இத்தனைக்கும் ஜெயலலிதா அறிக்கை மட்டுமே விடுவார். களத்தில் இருந்து அதிமுகவினர் களமாடுவார்கள். ‘பார்க்க ஜெயா டிவி... படிக்க நமது எம்.ஜி.ஆர்’ என்பது வேதவாக்காகவே இருந்த காலம் அது! நாட்டில் எவ்வளவோ முக்கிய நிகழ்வுகள் நடந்திருந்தாலும்கூட ஏதோ ஒரு நகராட்சியில், ஏதோ ஒரு பேரூராட்சியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம்தான் தலைப்புச் செய்தியாக ஜெயா டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், இப்போது அதிமுகவினர் போராட்டங்களைப் பெரிதாக நடத்துவதில்லை.

எதிர்கட்சியாக ஜெயலலிதா காலத்திய அதிமுகவுக்கும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் கால அதிமுகவுக்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளி, மிகப்பெரிய சறுக்கலாக உருவாகியுள்ளது. அதிமுகவின் போராட்ட அரசியல் ஓய்ந்துவிட்டதா என அக்கட்சியின் அதிமுக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினருமான தளவாய் சுந்தரத்திடம் பேசினோம். “இது கரோனா காலம். கூட்டம் அதிக அளவில் கூட்டினால் தொற்றுப் பரவலுக்கு வழிவகுத்துவிடும். அதனால்தான் தொடர் போராட்டங்கள் நடத்த முடியவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு அதிமுக மூலமே வெளிச்சத்துக்கு வந்தது. நாங்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே இருக்கிறோம்” என்கிறார் தளவாய் சுந்தரம்.

ரெய்டு
ரெய்டு

கரோனா காலம் என்பதால் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை ஒத்திவைத்த அதிமுக, தன் தொண்டர்களை ரெய்டு நடக்கும் முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களுக்கு மட்டும் திரட்டத் தவறுவது இல்லை. அங்கே தனிமனித இடைவெளி, முகக்கவசத்தைத் துறந்து குழுமும் தொண்டர்களுக்கு டீ முதல் இட்லி, பொங்கல் வரை விருந்து உபசரணைகளும் தொடர்கின்றன. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளோ, ”அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினால் எங்கே தங்கள் வீட்டுக்கும் ஐடி ரெய்டு வந்துவிடுமோ” என அச்சப்படுவதாகவும் அதிமுகவின் தொண்டர்களே பேசிக்கொள்ளும் சூழலும் எழுந்துள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், ”அதிமுக தைரியமாக இல்லை என்பது உண்மைதான். நயினார் நாகேந்திரன் சொன்ன கருத்தில் தவறில்லை. ஆனால், அவர் சொன்ன வார்த்தைகள் தேவையில்லாத வார்த்தைகள்” எனக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

நயினார் போராடினாரா?

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக இப்போதுதான் பாஜக ஜெயித்திருக்கிறது. இதற்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒருமுறைகூட பாஜக இங்கே 5 ஆயிரம் வாக்குகளைக்கூட கடந்தது இல்லை. அப்படி இருந்த பாஜகவை 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூட வைத்தது அதிமுக. சட்டசபையில் அதிமுக, திமுகவை எதிர்த்துப் பேசுவதில்லை என சாடும் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலியில் திமுகவுக்கு எதிராகப் பெரிய போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை என்பதும் நெல்லை மாவட்ட அதிமுகவினரின் வாதம்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தமிழக சபாநாயகருமான அப்பாவுவுடன் மிகவும் நெருக்கமான நட்பில் நயினார் நாகேந்திரன் இருப்பதையும் அதிமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனாலும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மண்டலத்தில் பாஜகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என கொதிநிலையில் இருக்கின்றனர் அதிமுகவின் தொண்டர்கள். ஆனால் அது மேல்மட்ட நிர்வாகிகளுக்கு இல்லை!

சொந்தக் கட்சிக்குள் கைதட்டலுக்காகவும், தலைவரை துதி பாடவும் நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு அதிமுகவை ரொம்பவே உஷ்ணப்படுத்திவிட்டது. ஆனாலும் இதை எதிர்க்கவும் முடியாமல், தொண்டர்களிடம் எதையாவது சொல்லிச் சமாளிக்கவும் முடியாமல் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அதிமுக. அம்மா காலத்து அதிமுகவை இனி பார்க்கவே முடியாதோ எனத் துவண்டு கிடக்கும் தொண்டர்களின் வருத்தம் எப்போது அகலும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in