
அதிமுக உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை தெரித்த கருத்துக்கு தமிழக பாஜகவில் அதிருப்தி அலையடிக்கிறது. இதனிடையே அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து; அகில இந்திய தலைமை எடுப்பதே இறுதி முடிவு’ என்று தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளான அதிமுக - பாஜக இடையிலான பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் விரிசலாக தென்பட்டது, தற்போது அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமிக்கு முடிசூட்டும் தருவாயில் வெடிப்பாக வெளிப்பட்டுள்ளது.
சென்னையில் பாஜக நிர்வாகிகள் மத்தியிலான கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர், “தனித்து நின்றால் மட்டுமே தமிழகத்தில் வளர முடியும். கூட்டணி முடிவை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக தொடர்வேன்” என்று வெடித்தார். இதற்கு இதர பாஜக தலைவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
கட்சிக்குள் விவாதிக்காது பகிரங்கமாக கூட்டணி தொடர்பான முடிவை வெளிப்படுத்தியதை பாஜகவின் இதர தலைவர்கள் விரும்பவில்லை. அண்ணாமலை பேசிய அதே மேடையில் தொடங்கி தனிப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு வரை இதை சக தலைவர்கள் எதிரொலித்து வருகின்றனர். சட்டமன்ற பாஜக குழுத்தலைவரும், கட்சியின் துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன், “அது அவருடைய தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை எடுப்பதே இறுதி முடிவு” என்று பின்னர் பேட்டியளித்தார்.
அவர் மேலும் பேசுகையில், ”தமிழகத்தில் எந்தக் கட்சியும் தனித்து தேர்தலை எதிர்கொண்டதில்லை. காங்கிரஸ் - திமுக, பாஜக - திமுக, பாஜக - அதிமுக என்றே கூட்டணிகள் தொடர்ந்திருக்கின்றன. இதுவே தமிழகத்தின் அரசியல் வரலாறு” என்று தெளிவுபடுத்தினார். மேலும், ’நயினார் நாகேந்திரன் பாஜகவில் அதிருப்தியில் இருப்பதாக’, கட்சியை விட்டு விலகிய சில நிர்வாகிகள் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு, ’தான் எந்த அதிருப்தியிலும் இல்லை’ என்று மறுப்பினை பதிவு செய்தார்.