`ஓட்டை மாற்றிப் போட்டேனா?'- நாகர்கோவிலில் தீராத தேர்தல் களேபரங்கள்

நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் களேபரங்கள் இன்னும் கூட முடிவுக்கு வந்தபாடில்லை. நாகர்கோவில் மாநகராட்சியில் வெறுமனே 11 கவுன்சிலர்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக, 24 வாக்குகளைப் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக 7 கவுன்சிலர்களை பெற்றிருந்த நிலையில் பாஜக கூட்டணியின் பலம் 18 ஆக மட்டுமே இருந்தது.

இந்நிலையில் கவுன்சிலர்களில் யாரெல்லாம் வாக்கினை மாற்றிப் போட்டார்கள் என்பது குறித்து யூக அடிப்படையில் பல தகவல்களும் உலாவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதிமுக கவுன்சிலர் உதயகுமார் , திமுக வட்ட செயலாளர் ராஜ்குமார் இடையேயான மோதல் புதிய பிரச்சினைக்கு தூபம் போட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இதில் 32 வாக்குகளைக் கொண்டிருந்த திமுக கூட்டணி 28 வாக்குகளே பெற்றாலும், மேயர், துணை மேயரைக் கைப்பற்றியது. பாஜக அதிக வாக்குகள் பெற்றிருந்த நிலையில் திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்த சுரேஷ்ராஜனின் பதவியும் அதிரடியாக பறிக்கப்பட்டது. மேயர் ஆன கையோடு, நாகர்கோவில் மாநகரச் செயலாளராக இருந்த மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியில் மதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. மதிமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிட்ட உதயகுமார் வென்றார்.

இந்நிலையில் நேற்று இரவு திமுக வட்டச் செயலாளர் ராஜ்குமார், தன்னை தாக்க வந்ததாக சொல்லும் உதயகுமார், அவரிடம் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் வட்டச் செயலாளர் ராஜ்குமார் குடிபோதையில் இருக்கிறார். ஆனால் உதயகுமாரைத் தாக்கவோ, முயற்சிக்கவோ இல்லை. மாறாக, ‘நான் தான் கையில் பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்தேன். ஆனாலும்..' எனச் சொல்லி ஆற்றாமையில் புலம்புகிறார். உடனே மதிமுக கவுன்சிலர் உதயகுமார், நான் ஓட்டை மாற்றிப் போட்டேன்னு உங்கிட்ட யாரு சொன்னா? அதை சொல்லு!’ எனக் கேட்கிறார்.

வீடியோவின் முன்பகுதியில் மதிமுக கவுன்சிலர் உதயகுமார், போதையில் இருக்கும் ராஜ்குமாரிடம், ‘நீ மாவட்ட செயலாளர் மகேஷ் அண்ணனின் ஆள்தானே? மேயர் தானே என்னை அடிக்கச் சொன்னார். அடி. நீ எப்படி என்னை கடையில் வந்து அடிக்க வருவாய்?’ என்கிறார். இந்த சம்பவம் பார்வதிபுரம் பாலத்தின் அருகில் பொதுமக்களின் முன்னிலையிலேயே அரங்கேறியுள்ளது. இதன்மூலம் நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தேர்தல் களேபரம் இன்னும்கூட முடிவுக்கு வரவில்லை எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in