சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு: நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத அரசு!

மோடி - நெய்பியூ ரியோ
மோடி - நெய்பியூ ரியோசரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு: நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத அரசு!

நாகாலாந்தில் புதிதாக அமையவுள்ள என்டிபிபி-பாஜக கூட்டணி அரசாங்கத்துக்கு கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியற்ற அரசாங்கம் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மார்ச் 2 ம் தேதி வெளியான நாகாலாந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, 60 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் என்டிபிபி 25 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 12 இடங்களிலும் வென்றதால், அக்கூட்டணி 37 இடங்களைப் பெற்றது.

மேலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 7 இடங்களிலும், என்பிபி 5 இடங்களிலும், எல்ஜேபி (ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி மற்றும் குடியரசுக் கட்சி(அத்வாலே) ஆகியவை தலா இரண்டு இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் பல அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். எல்ஜேபி (ராம் விலாஸ்) மற்றும் குடியரசுக் கட்சி(அத்வாலே) ஆகிய இரு கட்சிகளும் மாநில அரசியலில் புதிதாக நுழைந்தவர்கள். என்டிபிபி-பாஜக கூட்டணி இன்னும் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோராத நிலையில், அவர்கள் இரண்டாவது முறையாக ஆட்சியில் தொடர அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்து நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுள்ளனர்.

சரத் பவார்
சரத் பவார்சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு: நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத அரசு!

எல்ஜேபி (ராம் விலாஸ்), ஆர்பிஐ (அதவாலே), ஜேடி(யு) ஆகிய கட்சிகள் ஏற்கனவே கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ், நெய்பியூ ரியோ தலைமையிலான என்டிபிபிக்கு சனிக்கிழமையன்று நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் கடிதத்தை சமர்ப்பித்தது என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏ மோன்பெமோ ஹம்ட்சோ தெரிவித்தார்.

இதேபோல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான நாகா மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அச்சும்பெமோ கிகோன், புதிய அரசுக்கு ஆதரவு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், " எங்கள் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் என்டிபிபி-பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதால், நாகாலாந்தில் மற்றொரு முறை அனைத்துக் கட்சி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 மற்றும் 2021ம் ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் இல்லாத அரசாங்கங்கள் நாகாலாந்து ஆட்சியின் போது அமைக்கப்பட்டன. ஆனால் பதவியேற்பதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் இல்லாத முதல் சட்டசபை இதுவாகும்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. அதேபோல, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கடுமையான மோதல்போக்கினை அங்கே கடைபிடிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு கட்சிகளும், நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in