நாகாலாந்து வரலாற்றில் முதல் பெண் அமைச்சர்: நெய்பியூ ரியோ அமைச்சரவையில் இன்று பதவியேற்றார்

நாகாலாந்து பெண் அமைச்சர்
நாகாலாந்து பெண் அமைச்சர்நாகாலாந்து வரலாற்றில் முதல் பெண் அமைச்சர்: நெய்பியூ ரியோ அமைச்சரவையில் இன்று பதவியேற்றார்

நாகாலாந்தின் முதல் பெண் அமைச்சராக சல்ஹோட்டுனோவோ க்ரூஸ் இன்று பதவியேற்றார். நெய்பியூ ரியோ இன்று நாகாலாந்தில் 5 வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார், அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர்.

1963ம் ஆண்டில் நாகாலாந்து மாநிலம் உருவானப் பின்னர், அம்மாநில சட்டமன்றத்தில் இந்த ஆண்டுதான் ஹெகானி ஜஹாலு மற்றும் க்ரூஸ் ஆகியோர் முதன்முறையாக பெண் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானார்கள். இந்த தேர்தலில் என்டிபிபி மற்றும் பாஜக கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில் உள்ள ராஜ்பவனில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் இல.கணேசன் நெய்பியூ ரியோவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பாஜகவைச் சேர்ந்த யந்துங்கோ பாட்டன் மற்றும் என்டிபிபி கட்சியைச் சேர்ந்த டிஆர் ஜெலியாங் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பாஜகவைச் சேர்ந்த ஐந்து பேரும், என்டிபிபியைச் சேர்ந்த ஏழு பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாகாலாந்தின் முதல் பெண் அமைச்சராக பதவியேற்ற என்டிபிபி கட்சியைச் சேர்ந்த க்ரூஸ், மேற்கு அங்காமி தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான கெனீஜாக்கோ நக்ரோவை வெறும் ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 56 வயதான ஹோட்டல் உரிமையாளர் சல்ஹோட்டுனோவோ க்ரூஸ், 2018 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற என்டிபிபி வேட்பாளர் கெவிசெக்கோ க்ரூஸின் மனைவியாவார், கெவிசெக்கோ தற்போது உயிருடன் இல்லை, அரசியலில் தனது கணவரின் எண்ணங்களை நிறைவேற்ற விரும்புவதாக அவர் கூறினார்.

நாகாலாந்தில் உள்ள சுமவ்கெடிமா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் உரிமையாளராகவும் க்ரூஸ் உள்ளார். க்ரூஸ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார் அவர் கடந்த காலங்களில் அங்காமி மகளிர் அமைப்பின் தலைவராக பணியாற்றினார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அங்காமி பழங்குடியினர் அமைப்பில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in