`தமிழிசையிடம் மன்னிப்பு கேட்கவும்'- நாஞ்சில் சம்பத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

`தமிழிசையிடம் மன்னிப்பு கேட்கவும்'- நாஞ்சில் சம்பத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை ஒருமையில் பேசியதைக் கண்டித்து நாடார் அமைப்புகள் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

வைகோ
வைகோ

அரசியல் மேடைகளிலும், இலக்கிய மேடைகளிலும் சுவைபட பேசி அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்ப்பவர் நாஞ்சில் சம்பத். கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளை கிராமத்தைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். இவரது திருமணத்திற்கே கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார். ஆனால், வாரிசு அரசியலைக் கண்டித்து திமுகவில் இருந்து வெளியேறி வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அவர் பின்னால் நின்றார். மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தமிழகம் முழுவதும் மதிமுக வேர்விட நாஞ்சில் சம்பத்தின் பங்களிப்பும் பெரிதாக இருந்தது.

நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்தபோது, ‘வைகோவை மெல்லக் கொல்லும் சாரைப் பாம்பு’ என விமர்சிக்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில் வார இதழ் ஒன்றில் தான் பட்டபாடுகள் பற்றி சுயசரிதையும் எழுத சர்ச்சையானது. தொடர்ந்து மதிமுகவில் இருந்து அதிமுகவுக்குத் தாவினார். கட்சியில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியோடு அவருக்கு இன்னோவா காரும் வழங்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் ‘இன்னோவா சம்பத்’ என்னும் பகடிக்கும் உள்ளானார். அதிமுக மேடைகளில் திமுகவுக்கு எதிராக முழங்கியவர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது, ‘பட்டத்து யானை வீதி உலா வரும்போது சிறு எறும்புகள் பாதிக்கப்படத்தான் செய்யும்’ என்னும் தொணியில் ஜெயலலிதாவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பதாகைக் குறித்த கேள்விக்கு வானளாவப் புகழ்வதாக நினைத்துப் பேசினார். ஆனால் அதும் சர்ச்சையாகி, ஜெயலலிதாவின் கண்டனத்திற்கும் உள்ளானார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் சசிகலா தலைமையை ஆரம்பத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஏற்றபோது, ‘வான் கோழி மயில் ஆகாது’ என காட்டம் காட்டினார். அடுத்த சில வாரங்களில் சசிகலா தலைமையை ஏற்றார். சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றதும் தமிழக அரசியலில் சூழல் மாறியது. அப்போது டி.டி.வி.தினகரன் பக்கம் நின்றார். ஆனால் டிடிவி ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை என அதில் இருந்தும் விலகினார். இந்தச் சூழலில் அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு வர கோடம்பாக்கத்திலும் ஒரு ரவுண்ட் வந்தார். அதன்பின்னர் திமுக மேடைகளில் பேசிவரும் நாஞ்சில் சம்பத், பாஜகவுக்கு எதிராக காட்டமான விமர்சனங்களை முன்வைக்கத் தவறுவதே இல்லை. அண்மையில் தமிழக அரசு நாஞ்சில் சம்பத்திற்கு அண்ணா விருதும் வழங்கி கெளரவித்தது.

இந்நிலையில் தான் அண்மையில் தஞ்சைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிகழ்வுக்கு வந்து பேசிய தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘அண்ணா விருதுபெற்ற ஒருவர் என்னை அவள் என ஒருமையில் பேசுகிறார்’ என வருத்தத்தோடு பதிவு செய்தார். ஆனால் நாஞ்சில் சம்பத்தோ, ‘இலக்கியத்தில் பாரதியார் கடவுளையே சொல்லடி சிவசக்தி’ என்றுதான் பயன்படுத்தியுள்ளார். நான் அவள் எனச் சொன்னதில் தவறு ஏதும் இல்லை எனச் சொன்னார். இதனிடையே பாஜகவினர், நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளங்களில் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கடந்த வாரம், அதிமுகவின் சட்டவல்லுனர் குழுவில் இடம்பெற்றிருக்கும் இன்பதுரை, நாஞ்சில் சம்பத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போதும் அதே பிரச்சினை மீண்டும் ஏற்பட்டிருக்கலாம். கூடவே, அவருக்கு மனநோய் இருப்பதாகவும் சந்தேகிக்கிறோம். அதனால் அவர் பொதுக்கூட்டங்களில் பேச தடைவிதிக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்திலேயே புகார் கொடுத்திருந்தார். இப்போது 2 மாநிலங்களின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனும் வேதனை ததும்ப நாஞ்சில் சம்பத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

அரசியல் கட்சியின் பேச்சாளர்கள் மேடையில் ஒருமையில் பேசுவதும், தரம் தாழ்த்திப் பேசுவதும் காலம், காலமாக தொடர்ந்து வரும் நிகழ்வுதான். இதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியதுதான் என்று அணுகுபவர்களும் உண்டு. அதேநேரம் ஆளுநரை அரசியல் கட்சியினர் உரிய மரியாதையோடு, அவர்களின் செயல்பாட்டை மட்டுமே விமர்சிக்க முடியும் எனச் சொல்பவர்களும் உண்டு.

இதனிடையே நாஞ்சில் சம்பத்தைக் கண்டித்து அகில இந்திய நாடார் கூட்டமைப்பு என்னும் அமைப்பின் சார்பில் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் பரபரக்கிறது. அதில் நாஞ்சில் சம்பத், தமிழிசை சவுந்தரராஜனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போராட்டத்தைத் தூண்ட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in