
திருச்சி விமான நிலையத்தில் நடந்த மதிமுக -நாம் தமிழர் கட்சியினர் மோதல் குறித்த வழக்கு நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர்.
மதிமுக பொதுச்செயலாளரை வரவேற்க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன் ஆகியோர் தலைமையில் மதிமுகவினரும், சீமானை வரவேற்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் விமான நிலைய வாசலில் தங்களது கட்சி கொடிகளுடன் காத்திருந்தனர்.
வைகோ, சீமான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விமானத்திலிருந்து இறங்கி வந்தனர். அப்போது மதிமுக பொதுச் செயலர் வைகோ முதலில் அங்கிருந்து வெளியேறி, வாசல் பகுதிக்கு வந்தார். அவருக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி மதிமுகவினர் வரவேற்றனர்.
பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து விட்டு காரில் தஞ்சைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு கூடி இருந்த நாம் தமிழர் தொண்டர்களில் சிலர் வைகோ குறித்து கேலி பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதிமுக தொண்டர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கொடிக் கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கரிகாலன் என்பவர் மயங்கி விழுந்தார். அதேபோல் மதிமுகவினருக்கும் பலத்த அடி விழுந்தது.
இந்த மோதல் குறித்தும், தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விமான நிலைய காவல் நிலையத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு புகார் கொடுத்தார். அந்த புகார் தொடர்பாக விசாரணை செய்த போலீஸார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் சீமானும் சேர்க்கப்பட்டிருந்தார்.
அதனால் இந்த வழக்கு தொடர்பாக திருச்சிக்கு அடிக்கடி வந்த சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரு கட்சிகளும் தங்களுக்குள் சமரச உடன்பாட்டினை எட்டினர். இது தொடர்பான வழக்கு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களுக்குள் சமரசம் பேசி முடித்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இரு தரப்பினரும் சமரச உடன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைப்பதாகவும், அதன் மூலம் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர் எனவும் நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார்.