திமுகவிடமிருந்து மயிலாடி பேரூராட்சியைக் கைப்பற்றிய பாஜக!

திமுகவிடமிருந்து மயிலாடி பேரூராட்சியைக் கைப்பற்றிய பாஜக!

கடந்த 4-ம் தேதி உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடந்தபோது கவுன்சிலர்கள் கோரம் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சி தலைவர் பதவியை இன்று நடந்த தேர்தலில் பாஜக கைப்பற்றியது.

மயிலாடி பேரூராட்சியில் திமுக - பாஜக இடையே நேரடி போட்டி இருந்தது. இதில் வென்ற கவுன்சிலர் ஒருவரை சிலர் கடத்தியதாக அந்தக் கவுன்சிலரின் மனைவியே புகார் கொடுத்ததால் சர்ச்சையானதாலும், பெரும்பான்மை கவுன்சிலர்கள் வராத காரணத்தாலும் 4-ம் தேதி நடக்கவிருந்த தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடந்த தேர்தலில் மயிலாடி பேரூராட்சி தலைவர் பதவியை பாஜக கைப்பற்றியது. இங்கு மொத்தமுள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளை பாஜக கைப்பற்றியதால் தலைவர் துணைத் தலைவர் பதவிகள் பாஜக வசமானது.

மயிலாடி பேரூராட்சி நீண்ட காலமாக திமுக வசம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டங்கள் மற்றும் கேரளத்திற்கு சுவாமி விக்கிரகங்கள், தலைவர்களின் சிலைகள் மயிலாடியில் இருந்துதான் செல்லும். அந்த அளவிற்கு சிற்பக்கலைஞர்கள் நிறைந்த மயிலாடி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இங்குள்ள சிற்பக் கலைஞர்களை திருவிதாங்கூர் மன்னர்கள் சுசீந்திரம் ஆலயம் கட்டும் போது அழைத்து வந்து குடியமர்த்தியதாக வரலாறுகள் சொல்கின்றன. இத்தகைய பின்னணி கொண்ட மயிலாடி பேரூராட்சியை திமுகவிடம் இருந்து கைப்பற்றியது பாஜகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in