எனது மகன் திருமணத்திற்கு செலவு செய்தது வெறும் 3 கோடி தான்: ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம்

எனது மகன் திருமணத்திற்கு செலவு செய்தது வெறும் 3 கோடி தான்: ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம்

எனது மகன் திருமணத்திற்கு 3 கோடி ரூபாய் தான் செலவு செய்தேன் என்று தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பெ.மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த அமைச்சர் பி.மூர்த்தியின் மூத்த மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் செப்டம்பர் 9-ம் தேதி மிக பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணதிற்காக மதுரை பாண்டி கோயில் அருகே 32 ஏக்கரில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. 1 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தலும, ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. மொய் வசூலிப்பதற்காக தனியார் நிறுவனம் மூலம் 50 ஹைடெக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திருமணவிழாவில் பங்கேற்றவர்களுக்கு கறிவிருந்துக்காக 2 ஆயிரம் ஆடுகள், 5, ஆயிரம் கோழிகளுடன் மூலம் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. சைவ விருந்துக்கு தனிப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதிலும் பல்லாயிரக்கணக்கானோர் உணவு சாப்பிட்டனர். இசையமைப்பாளர் தேவாவின் இசைக் கச்சேரி நடந்தது. இந்த திருமண விழாவிற்காக பிரம்மாண்டமான முகப்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சாலை தொடக்கத்தில் இருந்து திருமணம் நடைபெற்ற இடம் வரை முழுவதும் ஆயிரக்கணக்கான கட்சி கொடிகளும், வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணத்தை விட வணிக வரித்துறை அமைச்சர் பெ.மூர்த்தி பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார் என்று சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், " அமைச்சர் மூர்த்தி தனது மகனுக்கு பிரம்மாண்ட திருமணம் நடத்தினார். இந்த பணம் எங்கிருந்து வந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டம், அரும்பனூரில் நடைபெற்ற நிகழ்வில் வணிக வரித்துறை அமைச்சர் பெ.மூர்த்தி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," என்னுடைய மகன் திருமணத்திற்கு மூன்று கோடி செலவு செய்துள்ளேன். அனைவரையும் சமமாக அமர வைத்து 1.5 கோடி ரூபாய் செலவில் உணவு கொடுத்தேன். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக குற்றம் சாட்டும் எடப்பாடி பழனிசாமி, அவர் முதல்வராக எத்தனை கோடி கொடுத்தார்? ஒரு தகரக்கொட்டகை போட்டு சாப்பாட்டு போட்டதற்கு ஒரு தரப்பு 1500 கோடி ரூபாய் செலவு செய்ததாக ஒருவர், இன்னொருவர் 30 கோடி ரூபாய் செலவு செய்ததாக சொல்கிறார். எதை அரசியலாக்குவது என்ற விவஸ்தை வேண்டாமா "என்று கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in