`கல்லூரியில் பணியாற்றும்போது என் பெயர் கேடி'- அமைச்சர் பொன்முடி சொன்ன விளக்கம்

`கல்லூரியில் பணியாற்றும்போது என் பெயர் கேடி'- அமைச்சர் பொன்முடி சொன்ன விளக்கம்

"கல்லூரியில் நான் பணியாற்றியபோது மாணவர்கள் என்னிடம் கேடி சார், தமிழில் பாடம் எடுங்கள் என்பார்கள்" என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் 50-வது ஆண்டின் 2019-2020-ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் எம்.எல்.ஏ லட்சுமணன், வேலூர் மண்டல கல்விக்குழு இணை இயக்குநர் காவேரியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூரில் அரசு கலைக்கல்லூரியும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இயங்கிவந்தது. அப்போதெல்லாம் கள்ளக்குறிச்சியில் இருந்தும் கடலூர், சிதம்பரம் சென்று படித்தனர். 1968-ம் ஆண்டு விழுப்புரத்தில் அரசு கலைக்கல்லூரி திறக்கப்பட்டது. நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தேன். அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட இக்கல்லூரி பின்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு பின் அண்ணாமலை பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெறுவீர்கள். இக்கல்லூரியில் நான் பணியாற்றியுள்ளேன். அப்போது மாணவர்கள் என்னிடம் KD சார், தமிழில் பாடம் எடுங்கள் என்பார்கள். அப்போது என் பெயர் கே.தெய்வசிகாமணி. இதனை சுருக்கி கேடி என்பார்கள்.

நம் மொழி மீதான காதலால் தமிழ்தாய் வாழ்த்து தொடங்கி, அரசு தேர்வுகளும் தமிழில் எழுதவேண்டும் என்று இந்த அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நான் பணியாற்றும் காலத்தில் எல்லாம் ஆங்கில வழிக்கல்விதான். அதன்பின் தமிழ் வழி கல்வியும், ஷிப்ட் முறையையும் கொண்டுவந்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். ஆரம்ப கல்வியை கொண்டுவந்தது காமராஜர் அரசாக இருந்தாலும், 3 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி, 5 கிலோ மீட்டருக்குள் 8-ம் வகுப்புவரை ஒரு பள்ளி என்று விரிவுப்படுத்தியது கருணாநிதி தலைமையிலான அரசுதான். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் குரல் கொடுத்து இருக்கவேண்டும். அது மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கானது என்றே வைத்துக்கொள்வோம். தற்போது சியூஇடி (CUET) தேர்வு எழுதினால்தான் உயர்கல்வி பயில முடியும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்புகுரல் கொடுத்திருக்கவேண்டாமா?" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in