
பாரத் ஜோடோ யாத்திரையில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல் காந்தி உண்மையின் கவசத்தால் பாதுகாக்கப்படுகிறார், அதனால் அவரது உயிருக்கு நான் பயப்படவில்லை என்று கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இன்று நுழைந்த ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி பேசினார். அப்போது, “வட இந்தியாவில் கடுமையான குளிர்காலம் காரணமாக ராகுல் காந்தியை ஜாக்கெட்டை அணியச் செய்யும்படி மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். அண்ணனின் உயிர் பற்றி பயமில்லையா என்று கேட்கிறார்கள். என் சகோதரன் சத்தியக் கவசத்தால் பாதுகாக்கப்படுகிறான், கடவுள் அவனைக் காப்பார். எதுவும் நடக்காது” என்று கூறினார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் பாதுகாப்பு சமீப காலமாக பேசுபொருளாக மாறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்களைக் காணும் ஜம்மு காஷ்மீருக்குள் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நுழைவதால், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இது தொடர்பாக கவலை தெரிவித்து வருகின்றனர்.