தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
துணை ராணுவப்படை குவிப்பு
குறிப்பாக சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். மேலும், வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு, செலவு ஆகியவை சரிபார்க்கப்பட்டது.
விடிய, விடிய விசாரணை
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்தில் நடந்த 13 மணி நேர சோதனையைத் தொடர்ந்து, வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் அமலாக்கத் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார். இதைதொடர்ந்து, மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மன உளைச்சல்
இந்த ரெய்டு குறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்," அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி பொன்முடிக்கு மன உளைச்சல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைத் தொடர்ந்து எதிர்த்து வந்ததால் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பொறுமையாக பதிலளித்தார்" என்று கூறினார்.
வழக்கு என்ன?
கடந்த 2006 - 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும், 28 கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் க.பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுதமசிகாமணி எம்.பி. தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 19-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனையைத் தொடர்ந்து தான், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடுக்கு எதிராக அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.