நடிகை காயத்ரி ரகுராம் வகித்த பதவியைப் பிடித்தார் இசையமைப்பாளர் தீனா

நடிகை காயத்ரி ரகுராம் வகித்த பதவியைப் பிடித்தார்  இசையமைப்பாளர் தீனா

நடிகை காயத்ரி ரகுராம் வகித்து வந்த தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனாவை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

பாஜகவில் மூத்த நிர்வாகிகளை அவமதிக்கிறார்கள் என்றும, கட்சியில் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் ஒரு பெண்ணாக இருந்தும் எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் பாஜகவினர் சிலர் மோசமாக பதிவிடுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார். அத்துடன் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தும் கூட வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழ் தொடர்பான நிகழ்வில் தன்னைப் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியான போது, சூர்யா சிவாவை காயத்ரி ரகுராம் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி திடீரென நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்." காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். எனவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது" என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் வகித்து வந்த தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தீனா, மாநில துணைத்தலைவராக ஆனந்த் மெய்யாசாமி ஆகியோரை இன்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நியமனம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in