கட்டிடம் தொடங்கி கழிப்பறை வரைக்கும்; ’கட்டிங்’ பேசும் கறார் கவுன்சிலர்கள்!

சென்னை மாமன்றக் கூட்டம்
சென்னை மாமன்றக் கூட்டம்

“வீடுகட்ட தெருவில் மணல் கொட்டினாலோ செங்கல் இறக்கினாலே கவுன்சிலர்களுக்கு மூக்கு வியர்த்துவிடும். கட்டிங் கேட்டு களத்துக்கே வந்துவிடுவார்கள்” - சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் இது காலங்காலமாக கேட்கும் அவலக்குரல். சென்னை மாநகராட்சியில் இந்த அவலக்குரல் இப்போது சற்று சத்தமாகவே கேட்க ஆரம்பித்திருக்கிறது. வீடுகட்டும் விஷயத்தில் மாத்திரமல்ல... பெட்டிக்கடை முதல் தள்ளுவண்டி வியாபாரிகள் வரைக்கும் தொட்டதுக்கெல்லாம் கவுன்சிலர்களுக்கு கமிஷன் வெட்டவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகப் புலம்புகிறார்கள் சென்னைவாசிகள்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்று வெற்றிகரமாக ஓராண்டை நிறைவுசெய்யப் போகிறார்கள். இங்கு, மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில், 102 பேர் பெண்கள், 98 பேர் ஆண்கள். ஆளும் தரப்புக்கு அதிகபட்சமாக 153 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அதிமுகவின் பலம் 15 மட்டுமே. 

“கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவோம்” என்று சொல்லி வாக்குக்கேட்ட இந்தக் கவுன்சிலர்களில் பெருவாரியானவர்கள் கூப்பிடாமலேயே வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் இப்போது. எதற்காகத் தெரியுமா... எதிலாவது ‘கட்டிங்’ வெட்டலாமா என்ற திட்டத்தில். இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமெல்லாம் இல்லை. அனைவரும் அவரவர் பாணியில் அள்ளித்தட்டுவதில் குறியாக இருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

வார்டு பிரநிதிகளின் இந்த வளமான வசூல் வேட்டை கட்டணக் கழிப்பறை தொடங்கி மீன் மார்க்கெட், கறிக் கடை வரைக்கும் நீள்கிறது. கட்டிங் மட்டுமல்லாது... சில கவுன்சிலர்களின் வீடுகளுக்கு இறைச்சி, மீன் என ‘ஓசி’ டெலிவரியும் செய்யவேண்டி இருப்பதாகப் புலம்புகிறார்கள் வியாபாரிகள்.

ஒரு சில கவுன்சிலர்கள் கட்டுமான நிறுவனங்களிலும் கட்டிங் கேட்டு கையேந்துகிறார்கள். இன்னும் சிலரோ, ‘டாஸ்மாக் பார்’களிலும் ‘கை’ வரிசை காட்டுவதாகச் சொல்கிறார்கள். அண்மையில் அண்ணாசாலையில் நடந்த கட்டிட விபத்தில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் பலியாகக் காரணமே வார்டு பிரதிநிதி ஒருவர் தான் என்கிறார்கள். அந்த நபர் மாநகராட்சி அதிகாரிகள் சிலருடன் கைகோத்துக் கொண்டு தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு அந்த பழைய கட்டிடத்தை இடிக்க தன்னிச்சையாக இசைவு கொடுத்ததாகச் சொல்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான், ‘மாநகராட்சியில் முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்களை இடிக்கக்கூடாது’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேயர் பிரியா
மேயர் பிரியாமாமன்றக் கூட்டத்தில்...

ஏழைகள் பயன்படுத்தி வந்த பொதுக்கழிப்பிடத்தை தனக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு தனியாருக்குச் சாதகமாக இடித்துத் தள்ளியதாக கவுன்சிலர் ஒருவர் மீது புகார்வாசிக்கிறார்கள் மக்கள். தனது வார்டில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை கண்டுகொள்ளாத அந்த கவுன்சிலர், எங்காவது வீடுகட்ட மணல் கொட்டினால் அடிவருடிகளை அனுப்பி அடாவடி வசூலில் ஈடுபடுவதில் அத்தனை அக்கறையாய் இருக்கிறாராம்.

இப்படி, கட்டிடம் தொடங்கி, போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்துக்கள் வரைக்கும் சென்னையில் பெருவாரியான கவுன்சிலர்கள் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஆண்களுக்கு நிகராக பெண் கவுன்சிலர்களும் களத்தில் நிற்பதுதான் ஆச்சரியம். கவுன்சிலர்கள் பலரும் ஆட்சிக்கு கெட்டபெயரை உண்டாக்குகிறார்கள் என்ற புகார் அறிவாலயம் வரைக்கும் எதிரொலித்ததால், அண்மையில் அனைத்து கவுன்சிலர்களையும் அறிவாலயத்துக்கே அழைத்து ‘வகுப்பு’ எடுத்து அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், அப்படியும் யாரும் திருந்தியபாடில்லை என்பதே களநிலவரம் என்கிறார்கள்.

துணை மேயர் மகேஷ் குமார்
துணை மேயர் மகேஷ் குமார்ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை நிச்சயம்

இத்தகைய புகார்களில் பெரும்பகுதி ஆளும் கட்சி கவுன்சிலர்களே சிக்கிவருவதால் இதுகுறித்து விளக்கமறிய சென்னை மேயர் பிரியாவை பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால், நமது போனை எடுத்துப் பதில்சொல்லக் கூட அவருக்கு நேரமில்லை. குறைகளைச் சொல்ல போன் போடும் சென்னை மக்களுக்கும் இதே அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வணக்கத்துக்குரிய மேயர் என்ற விஷயத்தை அப்புறம் தான் தெரிந்துகொண்டோம்.

மேயர் நமது அழைப்பை ஏற்காததால் துணை மேயர் மகேஷ் குமாரிடம் பேசினோம். ‘’வாய்புளித்தது, மாங்காய் புளித்தது என பேசவேண்டாம். எதிர்கட்சியினர் திட்டமிட்டு திமுக கவுன்சிலர்கள் மீது வதந்திகளைப் பரப்புகின்றனர். அண்ணாசாலை கட்டிட விபத்துக்கு கவுன்சிலரை குற்றம்சாட்டுவது தவறு. அது உண்மையும் இல்லை. தவறு செய்யும் கவுன்சிலர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று சொன்னவர், “ஏன்... ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மட்டும் தான் அடாவடி பண்றாங்களா... எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் எதுவும் செய்வதில்லையா..?’’ என்று கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

கார்த்திக் - அதிமுக மாமன்ற குழுச் செயலாளர்
கார்த்திக் - அதிமுக மாமன்ற குழுச் செயலாளர் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்

துணை மேயரின் கருத்து குறித்து மாநகராட்சின் அதிமுகவின் மாமன்றக் குழுச் செயலாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது, ‘’ துணை மேயர் உண்மைக்குப் புறம்பாக பேசுகிறார். ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் அடாவடி குறித்து அந்த வார்டு மக்களிடம் கேட்டால் தெரியும். கழிவுநீர், குடிநீர் இணைப்பு என அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. கவுன்சிலர்கள் நேரடியாக வருவதில்லை அதிகாரிகள் மூலமாகவே இந்த வசூல் வேட்டை நடக்கிறது. இது அனைவரும் அறிந்த செய்திதான். ஆதாரங்களுடன் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்” என்றார் அவர்.

கோட்டையில் இருக்கும் முதல்வர் திட்டங்களைப் போட்டு செயல்படுத்தினாலும் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் கவுன்சிலர்கள் தான். அப்படியானவர்கள் மக்களிடம் தேவையற்ற அதிருப்தியைச் சம்பாதித்தால் அது கோட்டையில் இருக்கும் முதல்வரையும் பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொண்டால் நல்லது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in