முல்லை பெரியாறு பிரச்சினையில் தோழமைக் கட்சிகள் மீது எங்களுக்கு வருத்தமில்லை!

கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ பேட்டி
முல்லை பெரியாறு பிரச்சினையில்
தோழமைக் கட்சிகள் மீது எங்களுக்கு வருத்தமில்லை!
முல்லை பெரியாறு அணை ஆய்வின் போது...

முல்லை பெரியாறு பிரச்சினை தென் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது. கேரளத்தில் பாஜகவுடன், காங்கிரஸும், தமிழ்நாட்டில் பாஜகவுடன் அதிமுகவும் சேர்ந்துகொண்டு அதில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கின்றன. உண்மையை மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய, தமிழக நீர்வளத் துறையோ பம்மிப் பதுங்கி, பாதி உண்மையை விழுங்குவது... இப்படி அரசியல் செய்வோருக்கு இன்னும் உதவியாகப் போய்விட்டது.

”உண்மையை உடைத்துப் பேசுங்கள்” என்ற வேண்டுகோளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசனை அணுகியபோது பேட்டியைத் தவிர்த்தார். இப்பிரச்சினையில் ஆழங்கால்பட்ட மூத்த அரசியல்வாதியும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏவோ, ”எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றார். இனி அவரது பேட்டி...

தமிழக உரிமையை நிலைநாட்டுவதற்காக முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரைத் தேக்கியவர் ஜெயலலிதா. ஆனால் திமுக ஆட்சியில், நிறைய தண்ணீர் வந்தும், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தாமல் உபரிநீராகக் கேரளாவுக்குத் திறந்துவிட்டது ஏன்?

ஜெயலலிதா காலத்தில் 142 அடி தேக்கப்பட்டது உண்மையே. அந்தக் காலத்தில், அணைக்கு நீர்வரத்து மிகக்குறைவாக இருந்ததால், பிரச்சினை ஏதும் எழவில்லை. கூடுதலாக வருகிற தண்ணீரை உபரியாக வெளியேற்ற வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. அதே ஜெயலலிதா ஆட்சியில், 7.5.2015-ல் மீண்டும் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. அப்போதும் வரத்துத் தண்ணீர் குறைவாக இருந்ததால், எந்தப் பிரச்சினையும் உருவாகவில்லை. 3-வது முறையாக 15.8.2018-ல் அதே அதிமுக ஆட்சியில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. ஆனால், அப்போது அணைக்கு நீர்வரத்தானது 27,343 கன அடியாக இருந்தது. நிறைய தண்ணீர் வருகிறதே என்று 142 அடிக்கு மேல் தேக்கவும் முடியாது. அது தீர்ப்புக்கு எதிரானதாகிவிடும் என்பதால், உள்ளே வந்த 27 ஆயிரம் கன அடியில் 2,300 கன அடி தண்ணீரைத் தமிழ்நாட்டை நோக்கித் திறந்துவிட்டுவிட்டு, எஞ்சிய தண்ணீரை விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் கேரளத்தை நோக்கித் திறக்க வேண்டிய கட்டாயம் அடுத்தநாளே (16.8.2018) ஏற்பட்டுவிட்டது. இதனால், கீழ்ப்பகுதியில் உள்ள கேரள மக்களுக்குக் கடுமையான சேதாரம் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் எந்தச் செயலை நீங்கள் பாராட்டுகிறீர்களோ, அந்தச் செயல்தான் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டது.

அந்த வெள்ளச் சேதத்தை அடிப்படையாக வைத்து கேரளத்தைச் சேர்ந்த ரஸ்ஸல் ஜோய் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டுவிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழ்ப்பகுதியில் உள்ள மக்களுக்குத் தண்ணீரால் அழிவு ஏற்படாத வகையில் அணையில் நீரின் அளவைப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதாவது, நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு, பருவமழை காலங்களில் பெய்கின்ற மழைப் பொழிவு, வரத்துத்தண்ணீர் எல்லாவற்றையும் கணக்கிட்டு தண்ணீர் தேக்கம், வெளியேற்றத்துக்கான ஓர் அட்டவணையை உருவாக்கி நடைமுறைப்படுத்தச் சொன்னது.

மத்திய நீர்வளத் துறை ஆணையமும், ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும் அட்டவணையை முறையாகப் பராமரித்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதற்குப் பெயர் ‘ரூல் கர்வ்’ (Rule Curve) விதி. எனவேதான், அணை 142 அடியை எட்டுமுன் திறக்க வேண்டியதாகிவிட்டது. இது கேரள அரசும், அன்று தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக அரசும் ஏற்றுக்கொண்ட விதிதான்.

ஆனால், அதிமுக ஆட்சியில் அது நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லையே? 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகே பிரச்சினை வருகிறது. எப்படி?

அதனைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் 2019, 2020-ம் ஆண்டுகளில் ஏற்படவில்லை. காரணம், அந்த ஆண்டுகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கான சாத்தியமே இல்லாமல் போனது. ஆனால், இந்த ஆண்டு (2021) முன்கூட்டியே மழை தொடங்கி, தொடர்ந்து பெய்துகொண்டிருக்கிறது. நீர்மட்டமும் மடமடவென உயர்ந்தது. எனவே, 16.10.2021 அன்று ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூல் கர்வ் விதிப்படி எந்தெந்தத் தேதியில் எவ்வளவு அடிக்குத் தண்ணீர் தேக்கலாம் என்று ஒரு அட்டவணையையே கொடுத்துவிட்டார்கள்.

அதாவது அக்டோபர் 30-ம் தேதி வரையில் 138 அடி, நவம்பர் 10-ம் தேதி வரை 140 அடி, நவம்பர் 30-ம் தேதி 142 அடி வரையிலும் தண்ணீர் தேக்கலாம் என்று பட்டியல் போடப்பட்டது. இதற்கான உத்தரவு கடந்த 28.10.2021 அன்று உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. நீர்வரத்து அதிகமிருந்ததால், அடுத்த நாளே அதைச் செயல்படுத்த வேண்டிய சூழல் வந்தது. எனவேதான், 29-ம் தேதியன்று காலை 138 அடிக்கு மேல் வந்த தண்ணீர் உபரிநீராகத் திறக்கப்பட்டது.

கம்பம் ராமகிருஷ்ணன்
கம்பம் ராமகிருஷ்ணன்

பேபி அணை பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்த கேரளம், இரண்டே நாளில் அதைத் திரும்பப் பெற்றது ஏன்? நன்றி சொன்ன தமிழக முதல்வரின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது கேரளம் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே?

ரூல்ஸ் கர்வ் உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், அதேநாளில் இன்னொரு உத்தரவையும் பிறப்பித்தது. பேபி அணையைப் பலப்படுத்தவும், அதற்குக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கான அணுகுசாலையைச் சீரமைக்கவும் நிலுவையில் உள்ள அனைத்து வன அனுமதிகளையும் கேரள அரசு விரைவுபடுத்த வேண்டும் என்பதே அந்த உத்தரவு. எப்படி ரூல்ஸ் கர்வ் விதியை இருமாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டனவோ, அதேபோல உச்ச நீதிமன்றத்தின் இந்த 2-வது வழிகாட்டுதலையும் இரு அரசுகளும் ஏற்றுக்கொண்டன. அதன் அடிப்படையில்தான், கேரள முதல்வர் பினராயி விஜயன், பேபி அணையில் உள்ள 13 மரங்களை அப்புறப்படுத்த அனுமதி வழங்கினார் என்பது உண்மை. அதற்குத் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் நன்றி சொன்னதும் உண்மை. அதன் பிறகு நடந்தது எல்லாமே அரசியல்.

ஆக, சட்டரீதியாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுலை அமல்படுத்த வேண்டிய மேற்பார்வைக் குழுவுக்கும், மத்திய நீர்வள ஆணையத்துக்கும் மரம் வெட்டும் பணியையும் நிறைவேற்றக்கூடிய கட்டாயம் இருக்கிறது. சிலர் அதைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். ஆனால், பினராயி விஜயனுக்கும், நம்முடைய முதல்வருக்கும் இடையே நல்ல புரிதலும், பரஸ்பர நட்புணர்வும் இருப்பதால் இந்தப் பிரச்சினை எளிதில் நல்ல தீர்வை எட்டும் என்று நம்புகிறோம்.

தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலை, கேரள அரசைவிட தமிழக முதல்வரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?

கட்சியில் இருப்பது வெறும் 4 பேர். அதை 6 பேராக்க ஏதாவது ஒரு பிரச்சினையைப் பிடித்து அரசியல் பண்ணியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் அவருக்கு. ஆனால், நாவடக்கம் இல்லாமல் பேசக்கூடாது. “தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் பறிகொடுத்துவிட்டார். காரணம், அவருக்குத் தேனி மாவட்டத்தில் நிலபுலன்கள் இல்லை. அதனால் அவருக்கு இதில் அக்கறையும் இல்லை” என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை.

கம்பம் சட்டமன்ற உறுப்பினராக அவரிடம் ஒற்றைக் கேள்வியை முன்வைக்கிறேன். நீங்கள் படித்துத்தானே ஐபிஎஸ் ஆனீர்கள், இந்தப் பிரச்சினை பற்றிய அடிப்படைப் புரிதல் ஏதாவது உங்களுக்கு இருக்கிறதா? அணையைத் திறக்கச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதை நடைமுறைப்படுத்தியது மத்திய நீர்வள ஆணையம். அப்படியானால், நீங்கள் யாரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்? உச்ச நீதிமன்றத்தை எதிர்த்தா? மத்திய நீர்வள ஆணையத்தை எதிர்த்தா அல்லது அதை இயக்குகிற மத்திய அரசை எதிர்த்தா? இதில் தமிழக முதல்வர் எங்கே வந்தார்? எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். விவசாயிகளையும், பொதுமக்களையும் குழப்புகின்ற, நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கின்ற, மாநில அரசுகளின் நட்புறவுக்குக் கேடு விளைவிக்கிற செயல் இது. மத்தியில் ஆளும் கட்சியின் மாநில நிர்வாகியே இதைச் செய்வது இழிவான அரசியல்.

முன்னாள் முதல்வரும், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவருமான ஓபிஎஸ்கூட தமிழக அரசு மாநில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டது என்று பேசியிருக்கிறாரே?

அணை கட்டிய 1895 முதல் 1978 வரையில் 152 அடியாக இருந்த பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 1979-ல் வெறும் 136 அடியாக குறைக்க ஒப்புக்கொண்டது யார், அப்போது தமிழ்நாட்டை ஆண்ட கட்சி எது என்பது ஓபிஎஸ்ஸுக்குத் தெரியாதா? எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது பறிகொடுத்த உரிமையை மீட்க நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்திய கட்சி திமுக. அணையைப் பலப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் செய்ததும், அணை பலமாக இருக்கிறது என்று நிலவியல், நீரியல், கட்டிடவியல் நிபுணர்களின் அறிக்கையைப் பெற்றதும் திமுக ஆட்சிதான். இதில் அதிமுகவுக்கும் பங்கிருக்கிறது, மறுக்கவில்லை. ஆனால், 142 அடிக்கு நீர் தேக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் ஒரு நிதானத்தைக் கடைபிடிக்காமல், 3-வது முறை மொத்தமாக 25 ஆயிரம் கன அடி தண்ணீரைக் கேரளத்துக்குத் திறந்துவிட்டது அதிமுக அரசு என்பதை ஓபிஎஸ்ஸால் மறுக்க முடியுமா? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தானே, அடுத்தடுத்த வழக்குகளுக்கும் ரூல் கர்வ் விதி அமல்படுத்தப்பட்டதற்கும் காரணம்?

கம்பம் ராமகிருஷ்ணன்
கம்பம் ராமகிருஷ்ணன்

கேரளாவில் வலுவாக இருக்கும் கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸும் இங்கே உங்கள் கூட்டணியில் இருந்தும்கூட வாய்மூடி மவுனமாக இருப்பது உங்களுக்குச் சங்கடம் தரவில்லையா?

திமுக இதைப் பெரிய சங்கடம் தருகிற செய்தியாகக் கருதவில்லை. ஏனென்றால் நம்மோடு தோழமையுடன் இருக்கிற கூட்டணிக் கட்சிகள், உண்மை நிலையை அறிந்துதான் வைத்திருக்கின்றன. இந்தப் பிரச்சினையின் முழு விவரம், தன்மை, தெளிவு இன்னும் ஆழமாகப் புரிபடாத காரணத்தால்தான், ஒரு தெளிவான பதிலை அவர்களால் தர இயலவில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மாட்டோம் என்றோ, பழைய அணையை இடிப்போம் என்றோ பினராயி விஜயன் ஒரு தவறான கருத்தைச் சொல்லியிருந்தால், அப்போது நம்முடைய தோழமைக் கட்சிகளின் எதிர்வினை என்னவென்று கவனிக்கலாம்.

2018-ல் தமிழகம் திறந்த தண்ணீர் கேரளத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியதாக நீங்கள் சொல்கிறீர்கள். இதன் மூலம் கேரளத்தவர்களுக்கு நீங்களே பாயின்ட் எடுத்துக் கொடுக்கிறீர்கள் என்றும், கேரளத்தில் உங்களுக்குச் சொத்து இருப்பதால்தான் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்றும் விவசாய சங்கத்தினர் சிலர் விமர்சிக்கிறார்களே?

இன்று ரூல் கர்வ் திட்டம் வருவதற்கும், நீர்மட்டம் 142 அடியை எட்டும் முன்பே உபரி தண்ணீர் திறக்க வேண்டிய சூழல் வந்ததற்கும் அதுதான் காரணம் என்கிறபோது, அதைச் சொல்லாமல் எப்படியிருக்க முடியும்? ஏன் சார், ஒருத்தனுக்கு இங்கேயும் அங்கேயும் சொத்து இருக்கக் கூடாதா? எங்க தாத்தன் பூட்டன் காலத்தில் இருந்து அங்கே சொத்து இருக்குது. எனக்கு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு அங்கே சொத்திருக்குது. இதே முல்லை பெரியாறு பிரச்சினைக்காகக் கேரளத்தில் இருக்கிற என்னுடைய பெட்ரோல் பங்க்கைத் தாக்கி, என்னுடைய தோட்டத்தில் இருந்த மின்வயர்களை எல்லாம் வெட்டி வீசினார்களே? இதெல்லாம் நான் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்ததால்தானே நடந்தது? அதன்பிறகும் இந்தப் பிரச்சினை பற்றி பகிரங்கமாகப் பேசிக்கொண்டுதானே இருக்கிறேன்?

எல்லாம் சரி. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் உபரி நீரைத் திறக்கப் போகிறோம் என்று முன்கூட்டியே இந்த அரசு அறிவித்திருந்தால், இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்காது அல்லவா?

தண்ணீரைத் திறக்க தமிழக நீர்வளத் துறை அனுமதித்ததும், தண்ணீரைத் திறக்கிறபோது தமிழ்நாடு அரசின் சார்பில் நம்முடைய அதிகாரிகள் உடனிருந்ததும் உண்மை. தமிழ்நாட்டிற்குத் தெரியாமல் கேரளா தண்ணீர் திறந்ததாகச் சொல்வதெல்லாம் பச்சைப் பொய். முந்தைய நாள் உச்ச நீதிமன்ற உத்தரவிட்டு, மறுநாளே அமல்படுத்த வேண்டியதிருந்தது. அந்த நேரத்தில் ரூல் கர்வ் பற்றி விளக்கம் சொன்னால் மக்களுக்குப் புரியுமா? அறியாமையால் இங்கே சட்டம் - ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டுவிடுமா என்று நினைத்து, அதிகாரிகள் வெளிப்படையாகச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

கடைசியாக ஒரு கேள்வி. பெரியாறு நீர்மட்டத்தை இந்த அரசு 152 அடியாக உயர்த்துமா, உயர்த்தாதா?

நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக பேபி அணையை வலிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு இரு மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதனடிப்படையில், மீண்டும் நாம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கும், மத்திய நீர்ப்பாசன ஆணையத்தை வலியுறுத்துவதற்கும் வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. நமது மாண்புமிகு முதல்வரும், நீர்வளத் துறை அமைச்சரும் அதற்கான முயற்சிகளை நிச்சயம் எடுப்பார்கள். 13 மரங்களை வெட்டுவது, பேபி அணையைப் பலப்படுத்துவது, 152 அடியாக உயர்த்துவதற்கான உத்தரவைப் பெறுவது என்று அத்தனை வேலைகளும் படிப்படியாக நடக்கும். கழக அரசு நடத்திக்காட்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in