மாநிலங்களவை எம்.பி சீட் கேட்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினர்: தென் மாவட்டங்களைத் தக்கவைக்குமா அதிமுக தலைமை?

ஓபிஎஸ், ஈபிஎஸ்...
ஓபிஎஸ், ஈபிஎஸ்...

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாகக் கூறிவரும் முக்குலத்தோர் சமுதாயத்தினர், தற்போது அதிமுக தலைமையிடம் மாநிலங்களவை எம்.பி சீட் கேட்டுள்ளனர். வரும் ஜூன் மாதம் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை அதிமுக தலைமை எப்படி கையாளும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. சசிகலாவின் உறவினர்கள் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததே அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் ஓரங்கட்டப்பட்டதும் முக்குலத்தோர் சமுதாயத்துக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதைக் காட்டுகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வன்னியர் சமுதாயத்துக்கு வழங்கிய 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் குறித்து அதிமுக அரசு அரசாணைகளை வெளியிட்டது. தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தோல்வியையே தழுவியது. மேலும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவில் இருந்த முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் திமுக மற்றும் பாஜக பக்கம் நகரத் தொடங்கினர்.

சசிகலா
சசிகலா

கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் வாக்குவங்கி குறையத் தொடங்கியது. முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்துவந்தபோதிலும் தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் இல்லை என அந்தச் சமுதாயத்தினர் கருதுகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை நேற்று (மே 15) திருநெல்வேலியில் நடைபெற்ற இசக்கி சுப்பையா இல்ல விழாவில் கலந்துகொண்ட ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரிடமும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் முன்வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

மேலும், கடந்த 2016-ல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கத்திற்கு ஜெயலலிதா பதவி வழங்கிய பிறகு தற்போதைய தலைமை முக்கியத்துவம் வழங்கவில்லை என்ற விவரத்தையும் எடுத்து சொல்லியுள்ளனர். அவர்களது சொன்ன கருத்துகளைப் பரிசீலனை செய்வதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே முக்குலத்தோர் சமுதாயத்தினர் சசிகலா, டிடிவி தினகரன் பக்கம் போகாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாநிலங்களவைத் தேர்தலில் முக்குலத்தோருக்கான முக்கியத்துவம் இல்லையெனில் அதிமுகவைச் சேர்ந்த பலரும் வேறு கட்சிக்குத் தாவத் தயாராகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. கொங்கு மண்டலத்தைக் கைக்குள் வைத்திருக்கும் அதிமுக தலைமை, முக்குலத்தோர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தென் மண்டலத்தையும் தன்வசம் வைத்திருக்குமா என்பது மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பைப் பொறுத்து இருக்கும் என்கின்றனர் அதிமுகவினர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்தக் கோரிக்கையை அதிமுக தலைமை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயமும் இருந்து வருகிறது.

இன்று திமுக வெளியிட்டுள்ள மாநிலங்களவை எம்.பி-க்கான வேட்பாளர்கள் பட்டியலில்கூட முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கோரிக்கையை முன்வைத்தவர்கள் அதிமுகவின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in