‘இனப்படுகொலையில் ஈடுபட்டவருக்கு குருநானக் ஜெயந்தியில் அனுமதியா?’

கமல்நாத்துக்கு எதிராக சீக்கியர் காட்டம்
‘இனப்படுகொலையில் ஈடுபட்டவருக்கு குருநானக் ஜெயந்தியில் அனுமதியா?’

குருநானக் ஜெயந்தியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு எதிராக சீக்கியரில் ஒரு சாரர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கமல்நாத் தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். இந்தோர் நகரில் நடைபெற்ற குருநானக் ஜெயந்தி விழாவில் நேற்று மாலை அவர் பங்கேற்றார். விழா மத்தியில் சீக்கிய மத பெரியவர்கள் சிலர் கமல்நாத்தை அந்த விழாவுக்கு அழைத்ததற்கும், கௌரவித்ததுக்கும் எதிராக ஆட்சேபம் தெரிவித்தனர். விழாவிலேயே கமல்நாத்துக்கு கண்டனம் தெரிவித்தும் பேசினார்கள்.

அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு, கமல்நாத்துக்கு எதிரான சீக்கியர் எதிர்ப்பை அதிகரித்து வருகின்றன. ’இந்திரா காந்தி படுகொலையை அடுத்து டெல்லியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட 1984 சீக்கிய இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றியவர் கமல்நாத். சீக்கியர்களை தேடி கொன்று குவிப்பவதற்கு காரணமானவரை சீக்கிய மதகுருவின் ஜெயந்தி விழாவுக்கு அழைக்கலாமா?’ என்று முழங்கிய சீக்கிய மத பெரியவர் ஒருவர், ’என் வாழ்நாளில் இந்தோர் பக்கமே இனி திரும்பமாட்டேன்’ என கசப்பு தெரிவித்தார். அவரது பேச்சு பெரியளவில் சுற்றுக்கு விடப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை முன்வைத்து மாநிலத்தை ஆளும் பாஜக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கமல்நாத்துக்கு எதிராக இரண்டாம் நாளாக கச்சைக்கட்டி வருகின்றனர். இரண்டு வாரங்களில்(நவ.23) ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் மத்திய பிரதேசத்தில் பிரவேசிக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் மும்முரமாக இருக்கும் கமல்நாத், குருநானக் ஜெயந்தி விழா சம்பவத்துக்கு பெரிதாக எதிர்வினையாற்றவில்லை. ‘இது பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. ஆன்மிகத்தில் அரசியலையும், வெறுப்பையும் விதைக்கும் பாஜகவினரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்’ என்பதோடு அமைதி காக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in