செல்வாக்கு இல்லாதவர்களுக்கு சீட் கிடையாது... ஜெகன்மோகன் ரெட்டி கறார் அறிவிப்பு!

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில்  மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும்தான் சீட் தர முடியும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கறாராக தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன், “மக்கள் மத்தியில் நமக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அதனைப் பயன்படுத்தி தனித்து நாம் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும்.
கள அளவில் யார், யாருக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என தனிப்பட்ட முறையில் எனக்கு தகவல் கிடைக்கும். அதற்கேற்பத்தான் வரும் தேர்தலில் தற்போதைய எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகும்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இருப்பினும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அந்த உறுப்பினர் எனக்குப் பிடிக்காதவர் என முடிவுக்கு வரக்கூடாது. கள அளவில் நமது வெற்றி மட்டுமே முக்கியம். எனவே, யாருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதோ அவர்களுக்குத்தான் தேர்தலில் சீட் தரமுடியும். தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் அதனால் அதிருப்தியடையக்கூடாது. வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு நமது ஆட்சி மீண்டும் வந்த பிறகு உரிய அங்கீகாரம் தரப்படும்” என்று தெரிவித்தார்.

ஜெகன்மோகனின் இந்த கறார் பேச்சு அங்கு தற்போது பதவியில் இருக்கும் எம்.பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா என்பதை  உளவு அமைப்புகள் மூலம்  மக்களிடம் சர்வே எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in