மகனுக்கு எதிராக திரும்பிய அம்மா... ஷர்மிளாவுக்கு வாக்கு கேட்டு வீடியோ; அதிர்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி!

ஜெகன்மோகன் ரெட்டி, ஷர்மிளா, விஜயம்மா
ஜெகன்மோகன் ரெட்டி, ஷர்மிளா, விஜயம்மா

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவி ஒய் எஸ் விஜயம்மா, கடப்பா மக்களவைத் தொகுதி மக்களிடம் தனது மகளும், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது மகனும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தனது மகள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு ஒய்எஸ்ஆர் ஆதரவாளர்களிடம் விஜயம்மா வீடியோ செய்தி மூலமாக வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “நான் உங்கள் விஜயம்மா, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியை (ஒய்எஸ்ஆர்) நேசிக்கும் மக்கள், அவரது ரசிகர்கள் மற்றும் கடப்பா மக்களவைத் தொகுதி மக்கள் அனைவரும் ஷர்மிளாவை ஆசிர்வதித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஷர்மிளா விஜயம்மா
ஷர்மிளா விஜயம்மா

ஒய்.எஸ்.ஆர் மீது மக்கள் அன்பையும் பாசத்தையும் பொழிந்தனர். வரவிருக்கும் தேர்தல்களிலும் ஷர்மிளாவுக்கு இதேபோன்ற ஆதரவை மக்கள் வழங்கவேண்டும். ஷர்மிளா தனது தந்தையைப் போல ஆதரவைக் கோரி வாக்காளர்களுக்கு முன் வந்துள்ளார். எனவே ஒய்எஸ்ஆரைப் போல மக்களுக்கு சேவை செய்ய எனது மகளுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும்” என அவர் தனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கடப்பா தொகுதியின் தற்போதைய எம்.பியான அவினாஷ் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா மகனான அவினாஷ், ஜெகனின் மற்றொரு சித்தப்பாவான விவேகானந்த ரெட்டியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் கனத மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 15, 2019 அன்று அவர் கொலை செய்யப்பட்டார்.

அம்மாவுடன் ஜெகன்மோகன் ரெட்டி
அம்மாவுடன் ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது தாயார் விஜயலட்சுமி மற்றும் தங்கை ஷர்மிளாவுக்கும் இடையே சில ஆண்டுகளாக மனக்கசப்பு உள்ளது. இதனால் ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலங்கானா எனும் கட்சியை தொடங்கினார். சமீபத்தில் அந்த கட்சியை கலைத்து விட்டு அவர் காங்கிரஸில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாநிலத்தில் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in