நீதிமன்றங்களைத் திறப்பதைவிட மூடுவதில்தான் அதிகப் பெருமை

உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் பேச்சு
நீதிமன்றங்களைத் திறப்பதைவிட மூடுவதில்தான் அதிகப் பெருமை
நீதிமன்றத்தைத் திறந்துவைத்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரே ஒரு காவல்நிலையம்தான் இருக்கிறது. அதற்கென ஏற்கெனவே ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (ஜெ.எம்.1) இருக்கிறது. இந்த நிலையில் அங்கு தேங்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக கூடுதலாக ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (ஜெ.எம்.2) திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "ஒரு காலத்தில் கொடைக்கானலுக்கான மாஜிஸ்திரேட் கோர்ட்டு நிலக்கோட்டையில்தான் இருந்தது. இங்கே அதன் கேம்ப் கோர்ட் மட்டுமே இருந்தது. அந்த கொடைக்கானலில் இப்போது 2வது மாஜிஸ்திரேட் கோர்ட் திறக்கப்படுவது பெருமையாக உள்ளது" என்றார். மேலும், தான் சட்டத்துறை அமைச்சசாக இருந்தபோது நீதித்துறைக்கு நிறைய கட்டிடங்கள் கட்டிக்கொடுத்ததைப் பற்றியும் பெருமையாகப் பேசினார்.

நீதிமன்றத்தைத் திறந்துவைத்துப் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன், "நீதிமன்றங்களை அதிகம் திறப்பது ஒரு நகருக்குப் பெருமை இல்லை. நீதிமன்றங்களை இழுத்துமூடுவது தான் பெருமை. அப்படியான நிலை வந்தால்தான், அந்த ஊரில் சண்டையும் கிடையாது, குற்றங்களும் இல்லை என்று பொருள். கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி நீதித்துறைக்கு எப்போதும் கூடுதல் நிதி கொடுக்க தயாராக இருப்பது மிகவும் வரவேற்புக்குரியது" என்றார்.

திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தலைமையில் நடந்த இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் முன்னிலை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.நிர்மல்குமார், ஆர்.என்.மஞ்சுளா, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். திண்டுக்கல் டிஐஜி ரூபேஸ்குமார்மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.