
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதல் குறித்து பேசியுள்ளார். 'ஆளும் பாஜக எவ்வளவு அதிகமாக தேர்தல் வெற்றிகளைப் பெறுகிறதோ, அவ்வளவு அதிகமாக எதிர்ப்புகளை சந்திக்கும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பூமிதாய்க்காக உழைக்க வேண்டும். அன்னை பூமி தன்னை நச்சுத்தன்மையுள்ள இரசாயனங்களிலிருந்து விடுவிப்பதற்காக அழுகிறாள். அவள் மரங்கள், தானியங்கள் மற்றும் பிற விளைபொருட்கள் மூலம் மனிதகுலத்தை வளர்த்துள்ளார்.எனவே அரசியல் சாராத காரணங்களுக்காக அரசியல்வாதிகள் உழைக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த கூட்டம் தொடர்பாகப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். எதையாவது அறியாமல் இருப்பதும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கக் காரணமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.
தொடர்ச்சியான எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை வெளிப்படையாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாஜக மேலும் மேலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதால் இதுபோன்ற போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்று கூறினார். கட்சி மேலும் தீவிரமான மற்றும் கீழ்மட்ட தாக்குதல்களை எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறினார்" என்று தெரிவித்தார்.
மூன்று வடகிழக்கு மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் இதுவாகும். இம்மாநிலங்களில் கட்சியின் சாதனைக்காக பிரதமர் மோடிக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டம் தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "ஆட்சியின் ஒன்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மே 15 முதல் ஒரு மாதத்திற்கு அந்தந்த தொகுதிகளில் பல்வேறு அரசாங்க திட்டங்களை விளம்பரப்படுத்த பிரதமர் மோடி கட்சி எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்" என கூறினார்.