பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது: பரபரப்புக் கிளப்பிய பாஜக கூட்டணியின் மேகாலயா முதல்வர்!

பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது: பரபரப்புக் கிளப்பிய பாஜக கூட்டணியின் மேகாலயா முதல்வர்!

பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா இன்று அறிவித்தார். இன்னும் சில மாதங்களில் மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் சங்மாவின் முடிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேகாலயாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கான்ராட் சங்மா, "ஒரு அரசியல் கட்சியாக, பொது சிவில் சட்டம் என்பது தேசிய மக்கள் கட்சியால் (என்பிபி) ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த சட்டம் மேகாலயா மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கக்கூடாது. சில பகுதிகளில் சில விஷயங்களைச் செய்ய மத்திய அரசு விரும்புகிறது, ஆனால் அவை நமக்குத் தெரியாத விஷயங்கள்.

சொத்துகள் குழந்தைகளுக்கு எப்படி மாற்றப்படும் என்பதையும் பொது சிவில் சட்டம் வரையறுக்கும். எனவே, நாட்டின் பிற பகுதிகளில் செய்வது போல் மூத்த மகனுக்கு செல்ல வேண்டும் என்று யுசிசி கூறினால், பல பழங்குடியினரில் இளைய மகளுக்கு சொத்துகளைக் கொடுக்கும் மாநில கலாச்சாரத்துடன் அது ஒத்துப்போகாது. யுசிசியின் முழுக் கருத்தும் மேகாலயா மாநிலத்தின் கலாச்சார நடைமுறைகளை மாற்றியமைக்கும் என்பதால், ஒரு மாநிலமாக, ஒரு கட்சியாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று இது" என்று கூறினார்.

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணியில் பாஜக, ஒருங்கிணைந்த ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மலைவாழ் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன. கடந்த ஒரு ஆண்டாகவே பாஜக மற்றும் முதல்வர் கான்ராட் சங்மா இடையே மோதல் வலுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஆளும் சங்மாவின் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

பாஜக தனது 2019 மக்களவை தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. மேலும், குஜராத், மத்திய பிரதேசம் என பலஆளும் மாநிலங்களிலும் யுசிசியை கொண்டுவர பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in