'அம்மா, நான் கண்டிப்பாகத் திரும்பி வருவேன்' - சிறையிலிருந்து உணர்ச்சிமிகுந்த கடிதம் எழுதிய சஞ்சய் ராவத்!

சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்
சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்

அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் சிறையில் உள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், தனது தாயாருக்கு உணர்ச்சிகரமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நீதிமன்ற காவலுக்கு செல்லும் முன் செஷன்ஸ் கோர்ட்டில் இருந்தபோது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தக் கடிதத்தை சஞ்சய் ராவத் எழுதினார். "இப்போதுதான் என் அமலாக்கத்துறை காவல் முடிந்தது. நீதிமன்றக் காவலுக்குச் செல்லும் முன் நீதிமன்றத்தின் வெளியே உள்ள பெஞ்சில் அமர்ந்து உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நான் உங்களுக்கு கடிதம் எழுதி பல வருடங்கள் ஆகிறது. மத்திய அரசு அதற்கு எனக்கு வாய்ப்பினை அளித்துள்ளது" என்று ஆகஸ்ட் 8 அன்று எழுதிய கடிதத்தில் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அந்த கடிதம் இப்போது சஞ்சய் ராவத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், "அம்மா, நான் கண்டிப்பாக திரும்பி வருவேன். நீங்கள் என் தாய், சிவசேனாவும் எங்கள் தாய். என் தாயுடன் நேர்மையற்றவராக இருக்குமாறு எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது, மிரட்டல்களுக்கு அஞ்சாததால் தான் சிறைக்கு செல்ல நேரிட்டது. இந்த சுயமரியாதையை உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். சிவசேனாவிடம் நேர்மையற்றவர்களாக இருக்கக் கூடாது என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். பாலாசாகேப்பிடம் நாங்கள் நேர்மையற்றவர்களாக இருக்கக் கூடாது என்று எங்கள் மனதில் பதிந்துவிட்டீர்கள். கடினமான காலங்களில் சிவசேனாவை விட்டுவிட்டால் பாலாசாகேப் என்ன செய்வார்?

நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் போராடுவது போல் தானும் அநீதிக்கு எதிராக போராடி வருகிறேன். அரசியல் எதிரிகளிடம் தலைவணங்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்

அக்டோபர் 10 அன்று நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய ராவத், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா முகாமுக்கு ஒரு புதிய ஒளிரும் ஜோதி சின்னம் புரட்சிகரமாக இருக்கும் என்றும், அதற்கு புத்துயிர் அளித்து எதிர்காலத்தில் அதை இன்னும் பலப்படுத்தலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பத்ரா சால் குடியிருப்பு முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரின் அமலாக்கத்துறை காவல் அக்டோபர் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in