ஏஐ தயவில் பாடகரான பிரதமர்... திக்கெங்கும் டிரெண்டாகும் மோடி வைப்!

பாடகர் மோடி
பாடகர் மோடி
Updated on
1 min read

செயற்கை நுண்ணறிவு புண்ணியத்தில் பிரதமர் மோடியை பாடகராக்கி வலம்வரச் செய்து, அழகு பார்க்கும் நெட்டிசன்களின் அட்ராசிட்டி இணையத்தில் அதிகரித்துள்ளது.

அரசியல் தலைவர்களின் பேச்சும் அவர்களது குரலில் படிந்திருக்கும் காந்தமும், அவர்களுக்கு தனி வசீகரத்தை கொடுக்கக்கூடியவை. அரசியல் வரலாற்றில் அதற்கு உதாரணங்கள் ஏராளம். நடப்பில், பிரதமர் மோடியின் குரல் இணையத்தில் திமிலோகப்பட்டு வருகிறது.

அதிலும் வடக்கத்திய பாடகரான உதித் நாராயணன் பாணியிலான மோடியின் உச்சரிப்பில் தமிழ் பாடல் வரிகள் தனி ரகமாக எதிரொலிக்கின்றன. மோடியின் தமிழக வருகையின்போது ’வணக்கம்... நன்றி’ மட்டுமன்றி, குறள்கள் வரை அவரது குரலில் எதிரொலிப்பதுண்டு.

ஏஐ தயவில் அந்த பிரபலக் குரலை தமிழின் கானா முதல் ஹஸ்கி வாய்ஸ் வரை பின்னிப்பெடலெடுத்து பாட வைத்திருக்கிறார்கள். இணையத்தில் நித்தம் களைகட்டும் மோடியின் பாடல்களுக்கு அவரது முகபாவங்களை எடிட் செய்ததோடு, பாடகர் தோற்றத்துக்காகவும் ஏஐ உதவியை நாடியிருக்கிறார்கள்.

வண்ணமயமான உடைகள் அணிவதில் மோடியின் ரசனை அலாதியானது. ஏறும் மேடைக்கேற்பவும் கூடியிருக்கும் மக்களுக்கு ஏற்பவும் அப்பகுதியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நோக்கிலும் அந்த உடுப்புகள் மோடிக்கு எடுப்பாக அமைந்திருக்கும். தற்போது ஏஐ உதவியால், பாடகருக்கான சர்வ லட்சணங்களோடும் மோடியை செதுக்கி சித்தரித்துள்ளார்கள்.

’ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ என்ற தலைமுறை கடந்த பாடல், ’மண்ணில் இந்த காதலின்றி’ என எஸ்பிபி மூச்சுவிடாது பாடியது என மென்மையான பாடல்கள் மட்டுமல்ல, ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா வெர்சன் குரலிலும் மோடி அதிரடிக்கிறார். ’உங்க குரலுக்கு அடிமையாகிட்டேன் ஜி’ என ஒரு நெட்டிசன் சதா மோடியின் ஏஐ குரலிலான பாடல்களை பகிர்வதை வேண்டுதல் போல தொடர்ந்து வருகிறார்.

தேசத்தில் தேர்தல் ஜூரம் கண்டிருக்கும் வேளையில், மோடியின் புதிய வைப் இளசுகளை அதிகம் ஈர்த்திருப்பது, பாஜகவினரை புல்லரிக்கச் செய்திருக்கிறது. மோடியின் குரலில் சினிமாப் பாடலா என முகம்சுளித்து வந்த மோடி ஆதரவாளர்களும், இப்போது முழுமூச்சாக மோடியின் ஏஐ குரலை எதிரொலிக்கச் செய்து வருகிறார்கள். முதல் வாக்காளர்கள் மத்தியில் மோடியின் புதிய அலைக்கு இவை வித்திட்டாலும் ஆச்சரிப்படுவதிற்கில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in