‘கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான வேறுபாடு குறைந்துவிட்டது’- பிரதமர் மோடி பெருமிதம்!

‘கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான வேறுபாடு குறைந்துவிட்டது’- பிரதமர் மோடி பெருமிதம்!

``இயற்கை வேளாண்மையைக் கிராம இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்'' எனக் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய மோடி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் 75வது ஆண்டு விழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டர்.

இதைத் தொடர்ந்து  வணக்கம் எனத் தமிழில் சொல்லி தன்னுடைய ஆங்கில உரையைத் தொடர்ந்தார் பிரதமர் மோடி. அப்போது பேசிய பிரதமர் மோடி, “குஜராத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து எளிமையாகவே வாழ்ந்தவர் மகாத்மா காந்தி. அகிம்சை, முற்போக்கு சிந்தனை போன்ற குணங்களைக் கொண்டவர் காந்தி. காந்திய கொள்கைகளை உலகம் முழுவதும் பின்பற்றுகிறார்கள். கதர் ஆடைகளை அணிந்தவர் காந்தி. அவரின் கதர் ஆடை கொள்கை உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் கதர் துணிகளின் விற்பனை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக அளவில் கதர் ஆடைகளை உடுத்த மக்கள் முன்வந்துள்ளார்கள். கதர் என்பது சர்வதேச உடையாக மாறிவிட்டது. ஏனென்றால் அது சுற்றுச் சூழலுக்கு உகந்தது.

ஒவ்வொரு கிராமமும் சுயமுன்னேற்றம் அடைய வேண்டும் எனக் காந்தி சொன்னார். காந்தியின் கொள்கைகளை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை இந்தியாவில் கொண்டு வந்திருக்கிறோம். சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளியாக தமிழ்நாடு இருந்து வந்துள்ளது. கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதியாக இருக்கிறது. கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் நகரத்தில் வசிப்பவர்களுக்கும் முன்பு வேறுபாடு இருந்து வந்தது. ஆனால் அதை இன்று சரி செய்து வருகிறோம்.  ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி, மின்சார வசதி, அனைத்து கிராமங்களுக்குச் சாலை வசதி என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைத்திருக்கிறது. கிராமம், நகரம் என தற்போது வேறுபாடுகள் குறைந்துவிட்டது. கிராமங்களில் இயற்கை வேளாண்மையை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in