முதல்வர் ஸ்டாலினின் கேள்விக்கும், கோரிக்கைக்கும் பதில் தராத பிரதமர் மோடி!

மோடி, ஸ்டாலின்
மோடி, ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 31,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட் விலக்கு, கச்சத் தீவு மீட்பு, மத்திய ஆட்சி மொழி மற்றும் உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ் மொழி அறிவிப்பு என பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு எடுத்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

முதல்வரின் உரையையடுத்து தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு வருவதென்பது மிக அற்புதமானது. மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் என அனைத்துமே மிகச் சிறப்பானவை. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என சீர் பெருமை நிறைந்த பாரதியார் பாடியிருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவராக விளங்குகிறார்கள். தமிழ் மொழி நிலையானது; நித்தியமானது. தமிழ் கலாச்சாரம் உலகலாவியது. தமிழ்நாட்டின் மேலும் ஒரு வளர்ச்சிப் பயணத்தைக் கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். சாலை கட்டுமானத்தின் மீது செலுத்தப்பட்டிருக்கும் கவனம் தெளிவாகப் புலப்படுகிறது. இது நேரடியாகப் பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது.

ஐந்து ரயில்வே நிலையங்கள் மேம்பாடு செய்யப்படுவது எனக்கு மகிழ்வளிக்கிறது. எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு நவீன மயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு இயைவானதாகவும் இருக்கும். மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாய சகோதர சகோதரிகளுக்கு உதவிக்கரமாக இருக்கும். அதிக அளவிலான சந்தைகளை அணுகுவதற்கு இது உதவும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு உட்பட்டு வரலாற்று மிக்க சென்னை கலங்கரை விளக்க வீட்டு வசதி திட்டத்தின் படி வீடுகள் கிடைக்கப் பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். திருவள்ளூர் முதல் பெங்களூரு வரையிலும், எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையிலான எரிவாயு குழாய் புதைக்கும் காரணமாகத் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக ஆக்கும் தொலை நோக்கு பார்வையோடு சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியில் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் மேலும் பிரபலப்படுத்தும் அளவிற்கு இந்திய அரசாங்கம் முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது. இங்கே விசாலமான ஒரு நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கு கூடங்கள், அரங்க மன்றம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய தொகுதியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கைகள் காரணமாகத் தொழில்நுட்ப மருத்துவப் படிப்புகளை உள்ளூர் மொழியிலேயே படிக்க இயலும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் பலன் அடைவார்கள். இலங்கை சிரமமான சூழலைக் கடந்து கொண்டிருக்கிறது. அண்டை நாடு என்ற முறையில் இலங்கைக்கு இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கி வருகிறது” என்றார்.

பிரதமர் மோடியின் பேச்சு முழுக்க வளர்ச்சி திட்டங்கள் பற்றியே இருந்தது. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைகள் ஒன்றிற்குக் கூட நேரடியாகவோ, மறைமுகமாகவோ மோடி எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in