(தடு)மாறும் மோடி; தோல்வி பயமா... தேர்தல் வியூகமா?

பாஜக தேர்தல் அறிக்கையுடன் மோடி
பாஜக தேர்தல் அறிக்கையுடன் மோடி

கடைசியில் அதானி - அம்பானியை முன்வைத்தே ராகுல் காந்தியை தாக்கத் தலைப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி. இது உட்பட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகளின் மத்தியில் மாறிவரும் மோடியின் போக்கு, பலவிதமான விவாதங்களை எழுப்பி வருகிறது. ஆனால், பாஜகவின் தேர்தல் வியூகங்களில் இதுவும் ஒன்று என பாஜக ஆதரவாளர்களும், பாஜகவின் தோல்வி பயத்தை எதிரொலிக்கிறார் மோடி என எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.

மூன்றாம் கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக பரப்பப்படும் இந்த விவாதங்கள், அடுத்தடுத்த கட்டங்களில் அதன் வெற்றியை பதம்பார்க்கலாம்.

சுதியிழந்த பாஜக முழக்கங்கள்

”மோடி 3.0 ஆட்சியை அமைப்பதில் பாஜக தனித்து 370 இடங்களுக்கு மேலாகவும், கூட்டணியாக 400க்கு மேலும் வாகை சூடும்” என்பது மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஆரம்ப முழக்கமாக இருந்தது. இந்த இறுமாப்பு நாளாக நாளாக கரைய ஆரம்பித்து, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் மத்தியில், பாஜக தலைவர்களே இந்த வெற்றிக் கணக்கு முழக்கத்தை தவிர்க்க ஆரம்பித்தனர்.

”பாஜக அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தால் அரசியலமைப்பு முதல் தன்னிச்சையான மக்கள் விரோத மாற்றங்களை செய்யும்” என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரம் காரணமாகவும் 400 இலக்கிலிருந்து பாஜக சுதியிறங்கியது. இன்னொரு பக்கம், பாஜகவின் சரிவை அதுவே ஒப்புக்கொண்டதாக தோற்றம் தந்தது. அதுமட்டுமன்றி மீண்டும் மோடி சர்க்கார் அமைப்போம் என்ற முழக்கத்தையும் பாஜக கைவிட்டது. பாஜக ஆட்சி அமைப்போம் என்பதிலிருந்து இறங்கி, தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்போம் என்று மோடியே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.

அடுத்தபடியாக ஆட்சியின் சாதனைகள், பெருமிதங்களை முன்வைக்காது, வாக்குகளை வசீகரிக்கும் இந்துத்துவம், பெரும்பான்மைவாதம் ஆகியவற்றையே பாஜக முன்னெடுத்தது. இப்படி எதிர்க்கட்சியின் கைவரிசைக்கு வாய்ப்பில்லாது சுயமாகவே தனது தடுமாற்றத்தை பாஜக வெளிக்காட்ட ஆரம்பித்தது.

ராகுல் - மோடி
ராகுல் - மோடி

ராகுலை முன்மொழிந்த மோடி

மோடி மீண்டும் பிரதமராவதை தடுக்கும் நோக்கிலேயே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவானது. மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை இழை மட்டுமே அவர்களை பிரதானமாக பிணைத்தது. ஆனால், மோடிக்கு எதிரான தங்கள் ’பிரதமர் வேட்பாளர்’ முகத்தை முன்னிறுத்துவதில் எதிர்க்கட்சிகள் குழம்பின. கூட்டணியின் பிரதான தேசியக் கட்சியான காங்கிரஸிலிருந்து பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த சம்மதித்தபோதும், ராகுல் காந்தியை தோழமை கட்சிகள் வலிய நிராகரித்தன. திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே ராகுல் காந்தியை நிராகரித்தன.

ராகுலுக்கு மாற்றாக மல்லிகர்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி ராகுல் காந்தியை வெறுப்பேற்றவும் செய்தார்கள். தேர்தல் முடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என கார்கே தர்மசங்கடத்துடன் அந்த வாய்ப்பை தவிர்க்க வேண்டியதாயிற்று. இப்படி எதிர்க்கட்சிகள் கூடாரத்தில் ராகுல் காந்தியை நிராகரித்தபோதும், பாஜக தரப்பில் மோடிக்கு நிகராக ராகுல் காந்தியை முன்னிறுத்த ஆரம்பித்தார்கள். மோடியே இதனை முன்மொழிந்தார். மோடி என்ற பிம்பத்தின் முன்பாக மாற்று நபர் இல்லை என்பதாகவே பாஜக இதனை செய்தது. ஆனால், அதுவே ராகுல் காந்திக்கு சாதமாக ஒரு கட்டத்தில் மாற்றம் பெற ஆரம்பித்தது.

மோடி நிகர் ராகுல்

ராகுல் காந்தியை பப்பு என்று ஏகடியம் செய்த பாஜகவினர், அதே போக்கில் மோடிக்கு நிகராக அவரை முன்னிறுத்த விரும்பினார்கள். ராகுல் முன்பாக மோடியின் பிம்பம் மேலும் விஸ்வரூபெமெடுக்கும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு, வேறு திசையில் தாறுமாறாக வெடித்தது. 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் மத்தியில் இயல்பாக மண்டியிருந்த அதிருப்திக்கு ராகுல் காந்தி வடிகாலானார். மோடி என்ற டாம்பீகமும் பகட்டான பேச்சும் நிறைந்தவருக்கு எதிர் திசையில், எளிமையும், இயல்புமான ராகுல் காந்தி மக்களை கவர ஆரம்பித்தார்.

கூட்டணி கட்சிகளால் முன்னிறுத்தப்படாதபோதும், சொந்தக்கட்சியின் நரைத்தலைகள் கால்வாரியபோதும், பாஜக வலிய முன்மொழிந்ததில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக உருவெடுத்திருக்கிறார். சகலத்திலும் மோடியுடன் ராகுலை ஒப்பிட இது மேலும் வழி செய்தது. பப்பு என பாஜகவினர் எள்ளி நகையாடிய ராகுல் காந்தி, மாற்று தேடிய மக்களுக்கு இணக்கமாக மாறினார். மோடி நிகர் ராகுல் என்ற ஒப்புமையில் பிரதானமாக இன்னொன்றும் வெளிப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில், ஆட்சி அதிகாரத்துக்கு வாய்ப்பின்றி தடுமாறி வருகிறது. மாநிலங்களிலும் பெரும்பாலானவற்றில் பாஜக அல்லது அவற்றின் கூட்டணி கட்சிகளின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. ஆனபோதும் ராகுல் தரப்பில் சற்றும் பதற்றம் இல்லை. அசுர பலத்துடன் வெல்வோம் என்று உற்சாகமாக தேர்தலை எதிர்நோக்கிய பாஜகவும் அதன் தலைவர்களுமே இப்போது தடுமாற்றத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது இன்னமும் 4 கட்ட வாக்குப்பதிவுகள் மிச்சமிருக்கும்போதே பெரிதாக வெடித்திருக்கிறது.

ராகுல் - மோடி
ராகுல் - மோடி

பாஜகவை பதறவைக்கும் சமிக்ஞைகள்

400 இடங்களில் வெற்றி என இறுமாப்போடு பாஜக வெளியே சபதமிட்டாலும், உள்ளூர உதறல் எடுத்திருப்பது அதன் சகல நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டது. முக்கியமாக, தேர்தல் நெருக்கத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என பலவற்றாலும் எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டன. சுயமான அந்த அமைப்புகளை பாஜக அதிகாரம் வளைத்தவிதம், நீதிமன்றத்தில் குட்டுப்பட்டும் குறைந்தபாடில்லை. அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத் பக்கம் வந்துவிடக்கூடாது என்ற முனைப்பில், அவரது ஜாமீன் மனுவுக்கு எதிராக பெரும் சட்டப்போராட்டத்தையும் நடத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ விசாரணை மட்டுமன்றி என்எஸ்ஜி கமாண்டோக்களும் களமிறங்கி இருக்கிறார்கள். சந்தேஷ்காலி விவகாரத்தில் திரிணமூல் கட்சியினரை சங்கடத்தில் ஆழ்த்தும் செய்திகள் பொதுவெளியில் பரப்ப மெனக்கிட்டது. ஆனால் திரிணமூல் கட்சியினர் நடத்திய ஸ்டிரிங் ஆபரேஷனில், பாஜகவின் நாடகம் பலதும் அம்பலமானது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கிய வருமான வரித்துறையின் நடவடிக்கைகள், பொதுவெளியில் பாஜகவுக்கு எதிராகவே அதிர்வலைகளை ஏற்படுத்தின.

கூடுதல் கெட்ட சமிக்ஞையாக, மக்களவைத் தேர்தலின் மத்தியில் ஹரியாணா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. சுயேச்சைகள் தன்னிச்சையாக விலகி, பாஜக ஆட்சியை கலைத்தே தீருவது என கங்கணம் கட்டியுள்ளனர். பாஜகவின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தியால் உத்தரபிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

குஜராத்தில் ராஜ்புத்ரர் எதிர்ப்பு மட்டுமன்றி, அமித் ஷாவின் காந்தி நகர் உட்பட பல்வேறு தொகுதிகளில் சுயேச்சை உள்ளிட்ட எதிர்தரப்பு வேட்பாளர்களை வாபஸ் பெறச்செய்யும் பாஜகவினரின் அராஜகம் பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் சாதக அம்சங்களில் ஒன்றாக பாஜக நம்பியிருந்த கோவிஷீல்டு தடுப்பூசி விவகாரமும் அதனை தடுமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதானிக்கு எதிராக வாய் திறந்த மோடி

அதானி - மோடி இடையிலான தொடர்புகளை ராகுல் காந்தி கிளறியதில் அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு புதுவேகம் பிடித்து, அவரது மக்களவை உறுப்பினர் பதவி ரத்து வரைக்கும் போனது. அதானியை முன்வைத்து, மக்களவை முதல் பொதுவெளி வரை மோடியை சங்கடமூட்டும் வகையில் ராகுல் காந்தி ஏராளமான கேள்விகளை எழுப்பினார். அவை எவற்றுக்குமே வாய் திறவாத மோடி, எவருமே எதிர்பாராத ட்விஸ்டாக, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் அங்கமாக அதானி குறித்து பேசினார். அதுவும் அதானிக்கு எதிராகவே அந்த குரல் தொனித்தது.

“அம்பானி - அதானி ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த ராகுல், மக்களவைத் தேர்தல் ஆரம்பித்ததும் அதை மறந்தது எப்படி? அதானி - அம்பானியிடமிருந்து ராகுல் ’மால்’ வாங்கிவிட்டாரா?” என்று தெலங்கானா பிரச்சாரத்தில் மோடி எழுப்பிய கேள்வி எதிர்க்கட்சிகளிடம் மட்டுமன்றி, பாஜகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வீடியோ பதில் வெளியிட்ட ராகுல், மோடியின் பதற்றத்தை சுலபமாக நாடி பிடித்தார். தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது முதல், தேதி வாரியாக அதானிக்கு எதிராக ராகுல் பேசியதை வீடியோவாக தயாரித்து சமூக ஊடகங்களில் காங்கிரஸ் சுற்றுக்கு விட்டது.

இவற்றைவிட அதானிக்கு எதிராக மோடி வாய் திறந்திருப்பது பாஜக மற்றும் மோடியின் பதற்றத்தை வெளிக்காட்டியதோடு, பாஜகவின் தோல்வி பயத்தையும் சுட்டிக்காட்டி உள்ளன. வழக்கமாக ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகள் தென்படும்போது, அதுவரை ஆளும்கட்சியின் நிழலை பெரிதும் நம்பியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயக்கமின்றி தங்கள் ஜாகையை மாற்றிக்கொள்ளும். 2019 தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக அம்பானி நிறுவனம், ராகுல் காந்திக்கு எதிரான தங்களது வழக்குகளை அவசரமாக திரும்பப்பெற்றது ஓர் உதாரணம்.

முகேஷ் அம்பானி - கௌதம் அதானி
முகேஷ் அம்பானி - கௌதம் அதானி

தோல்வி பயமா, தேர்தல் வியூகமா?

ஆனால் இவையனைத்தையும், “பாஜகவின் தோல்வி பயத்திலான தடுமாற்றமல்ல, தேர்தல் பிரச்சார வியூகங்களில் ஒன்றே” என்று கணிப்பவர்களும் உண்டு. இந்த தேர்தலில் ஆதரவு - எதிர்ப்பு என்பவர்களுக்கு அப்பால், மதில் மேல் பூனையாக காத்திருக்கும் வாக்காளர்களே அதிகம் என்பதால், அவர்களை குறிவைத்து பாஜகவின் தேர்தல் வியூகம் ஆரம்பம் முதலே களைகட்டி வருகிறது. அவர்களை உசுப்பேற்றும் வகையிலான உணர்வெழுச்சி வாதங்கள், சாடல்கள் ஆகியவற்றை எதிர்க்கட்சியினருக்கு எதிராக பாஜக தொடுத்து வருகிறது.

அந்த வகையில் ராமர் கோயில் எதிர்ப்பு, சொத்து மறுபங்கீடு, இந்து விரோதம், பாகிஸ்தான் ஆதரவு என காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவற்றை பாஜக தனி வியூகமாகவே பரப்பி வருகிறது. மேலோட்டமான இந்த வாதங்கள் எளிதில் மக்களை உசுப்பேற்றக்கூடியவை. மேலும், ஆளும்கட்சி மீதான, அதன் 10 ஆண்டு ஆட்சிக்கு எதிரான அதிருப்திகளை எளிதில் திசைமாற்றக் கூடியவை. இதே வரிசையில் தற்போது அதானி - அம்பானி விவகாரத்திலும் காங்கிரஸ் மீது மோடி பாய்ந்துள்ளார்.

இந்த திசை திருப்பல்கள், தங்கள் மீதான அதிருப்தி அலையை தணிக்க உதவும் என்பதும் பாஜகவின் நப்பாசையாக இருக்கலாம். ஆனால் பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகாது, காங்கிரஸ் நிதானமாகவே முன்னேறி வருவது, பாஜகவை மேலும் தடுமாற்றத்துக்கு ஆளாக்குகிறது. எனவே, எதிர்வரும் தேர்தல் பிரச்சாரங்களில் மேலும் பல களேபரங்களை எதிர்பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in