அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி?

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி?

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க வரும் தமிழகம் வரும் மோடி, அடுத்த நாளே அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜூலை 28-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். இதற்காக தலைமைச் செயலாளர் இறையன்பு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் 29-ம் தேதி நடைபெற இருக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழக 49-வது பட்டமளிப்பு விழாவில் மோடி பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் மோடி, மாணவர்களுக்குப் பட்டங்களையும், பரிசுகளையும் வழங்குவார் எனத் தெரிகிறது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகக் கடந்த மே மாதம் சென்னை வந்திருந்தார் மோடி. அதில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது, மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளைச் செயல்படுத்த வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் அந்த மேடையிலேயே கோரிக்கை விடுத்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. “தமிழக அரசை ஆலோசிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் தேதியை அறிவித்தது கண்டனத்திற்குரியது. இந்த பட்டமளிப்பு விழாவைத் தமிழக அரசு புறக்கணிக்கிறது” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.

இதைத் தொடர்ந்து, “தமிழகத்தில் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும். அதில் மத்திய கல்வி அமைச்சரோ மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளோ கலந்து கொள்வார்கள். அந்த விழாவை பொன்முடி புறக்கணிப்பாரா?” என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் மீண்டும் விழாக்கள் நடைபெற உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in