மோடியின் மதுரை வருகை ரத்தாகிறதா?

கடந்த முறை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தபோது...
கடந்த முறை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தபோது...

தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவுக்காக வருகிற 12-ம் தேதி விருதுநகர் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய தினம் மதியம் புதுச்சேரியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர், மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி செல்கிறார். திறப்பு விழா முடிந்ததும் மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர். அந்த நிகழ்ச்சிக்கு ‘மோடி பொங்கல் விழா’ என்றே பெயரிட்டுள்ளார்கள் பாஜகவினர்.

இந்த நிகழ்ச்சிக்காக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுவதாகவும், அந்தக் குழுவில் மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர்.மகாலட்சுமி, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உட்பட 18 பேர் இடம்பெற்றிருப்பதாகவும் மாநில தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி நேற்று மாலை அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதுடன், தியேட்டர்கள், உணவகங்கள், பூங்காக்களில் 50 சதவீத பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள்கூடும் நிகழ்வுகளுக்குத் தற்போது நடைமுறையிலுள்ள தடையே தொடரும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், அரசியல் கட்சி கூட்டங்கள், அரசு விழாக்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால், எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகளை மட்டும் தடுத்துவிட்டு, அரசு விழாக்களும், ஆளுங்கட்சி கூட்டங்களும் வழக்கம்போல நடைபெற வழிவகுத்துவிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சென்னையில் 4-ம் தேதி தொடங்குவதாக இருந்த புத்தகக் காட்சி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அந்நிகழ்ச்சியில் முதல்வரும் பங்கேற்பதாக இருந்தது. இதேபோல 14-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் அரசு விழாவான மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவும் தள்ளிவைக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது வீடியோ கான்பரன்ஸ் முறையில் அந்த நிகழ்வை நடத்தலாம் என்று தெரிகிறது.

அப்படி மாற்றம் செய்யப்பட்டால், மதுரையில் பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ள மோடி பொங்கல் விழாவும் ரத்துசெய்யப்படலாம் என்கிறார்கள் அதிகாரிகள். மத்திய அரசின் அழுத்தத்தின்பேரிலேயே மாநில அரசு கரோனா ஊரடங்கை கடுமையாக்கியிருப்பதால், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் திமுக அரசு மீது பாஜக குற்றம் சொல்லமுடியாது என்று திமுகவினரும் நிம்மதியாக இருக்கிறார்கள்.

இதுகுறித்து மதுரை மாவட்ட பாஜகவினரிடம் கேட்டபோது, "ஊரடங்கு கட்டுப்பாடுகளானது 10-ம் தேதி வரையில்தான் நீட்டிக்கப்பட்டுள்ளது. மோடி வருவது பொங்கல் விழாவையொட்டிதான். எது என்ன ஆனாலும், பொங்கலையொட்டி அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ரத்துசெய்யப்படாது. அது மக்கள் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அந்த நேரத்தில் உரிய கட்டுப்பாடுகளுடன் பொங்கல் விழாவுக்கு அரசு அனுமதித்துவிடும். எனவே, மோடி பொங்கல் விழாவும் திட்டமிட்டபடி நடைபெறும்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in