``புதிய பட்ஜெட்டில் ஏழைகளின் நலத்திட்ட நிதியை குறைத்து அதானிக்கு சலுகை அளிக்கும் அரசாக மோடி அரசு உள்ளது'' என மாணிக்கம் தாகூர் எம்பி கூறினார்.
மதுரை அருகே வேடர்புளியங்குளத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. புதிய பட்ஜெட்டில் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட நிதியை குறைத்து, அதானிக்கு சலுகை அளிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. பாஜக ஆட்சியை கலைத்த அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளமைக்கு பாஜகவினர் பதில் சொல்லட்டும்.
அதானியுடன் மோடி சென்ற வெளிநாட்டு பயணங்கள், அதானிக்கு பெற்று தந்த ஒப்பந்தங்கள், மோடியின்றி அதானி தனித்து பெற்ற ஒப்பந்தங்கள், கடந்த 2 பொதுத்தேர்தல்களின் போது பாஜகவிற்கு அதானி அளித்த நிதி என 5 கேள்விகளுக்கு பதில் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். வராணாசி மோடியின் தொகுதி என்பதால் ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.