மோடியை சந்திக்க அனுமதி கேட்ட ஓபிஎஸ்- ஈபிஎஸ்: பிரதமர் அலுவலக நிபந்தனைகளால் அதிர்ச்சி!

மோடியை சந்திக்க அனுமதி கேட்ட  ஓபிஎஸ்- ஈபிஎஸ்: பிரதமர் அலுவலக நிபந்தனைகளால் அதிர்ச்சி!

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்ற வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் தரப்பில் சந்திக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரும் பிரதமர் மோடி மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஐஎன்எஸ் அடையாறில் ஓ.பன்னீர் செல்வமும் பிரதமரை வரவேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுகளுக்குப் பிறகு தமிழக பாஜக நிர்வாகிகளை மோடி சந்தித்துப் பேச இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகியோர் பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. ஒற்றைத் தலைமை பிரச்சினை தொடங்கிய நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதல் நீடித்து வருகிறது. நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் இருதரப்பினரும் அதிகார யுத்தம் நடத்தி வருகிறார்கள். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பதவி ஏற்பு விழாவிற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிரதமர் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே, சென்னை வரும் மோடியை அவர்கள் சந்திக்க அனுமதி கேட்டிருந்தனர். இந்நிலையில், இருவரும் ஒன்றாகச் சந்திக்க வேண்டுமானால் அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது எனப் பிரதமர் அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோரை பிரதமர் தனித்தனியாகச் சந்திப்பாரா, இருவரையும் ஒன்றாகச் சந்திப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in