நலம் விசாரித்த பிரதமர் மோடி: அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்!

நலம் விசாரித்த பிரதமர் மோடி: அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாகக் கடந்த 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்ட நிலையில் வீடு திரும்பினார். அன்று உடல் சோர்வுடன் காணப்பட்ட முதல்வருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் முதல்வர். இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவப் பரிசோதனை முடிந்து முதல்வர் இன்று அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து தொலைப்பேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். அப்போது, சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in