
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (பிப்.20) ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பல ஆளுமைகளை, இன்று (பிப்.18) டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பிரதமர் மோடி கூட்டம் நடத்தியிருப்பது கவனம் ஈர்க்கிறது.
இந்தக் கூட்டத்தில் டெல்லி குருத்வாரா கமிட்டி தலைவர் ஹர்மீத் சிங் கால்கா, பத்மஸ்ரீ விருது பெற்றா பாபா பல்பீர் சிங் ஜி சிச்சேவால், மஹந்த் கரம்ஜித் சிங், பாபா லோகா சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் குருத்வாராக்களில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில், கேப்டன் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் சிங் திண்ட்ஸா தலைமையிலான அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது பாஜக.