
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. 2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், 20 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கு இது மிகப் பெரிய வெற்றி ஆகும்.
1977-ல் சிரோமணி அகாலிதளம் 59 இடங்களில் வென்றது. 1997-ல் 75 இடங்களில் வென்றது. 1987-ல் காங்கிரஸ் கட்சி 87 இடங்களில் வென்றது. ஆனால், மொத்தம் உள்ள 117 இடங்களில் 92-ல் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது ஆஆக.
பல்முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், காங்கிரஸுக்கு 18 இடங்கள் கிடைத்தன. சிரோமணி அகாலி தளத்துக்கு 3 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரே ஒரு இடமும் கிடைத்திருக்கின்றன. பாஜகவுக்கு இரண்டே இரண்டு இடங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சிக்குப் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். “பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியை வாழ்த்துகிறேன். பஞ்சாப் நலனுக்காக, சாத்தியமுள்ள அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்” என்று தனது ட்வீட்டில் மோடி குறிப்பிட்டிருக்கிறார்!