மோடி 3.0 அலைக்கு வித்திடுமா குஜராத் வியூகம்?

மோடி 3.0 அலைக்கு வித்திடுமா குஜராத் வியூகம்?

நடைபெறவிருக்கும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது, பாஜகவினரை பொறுத்தளவில் தேசம் அறிந்த ரகசியம். ஆனபோதும் அங்கே பாஜக மேற்கொண்டு வரும் பிரச்சார பிரயத்தனங்களும், குஜராத் வீதிகளில் அவர்கள் காட்டும் முனைப்பும், கட்சி நிர்வாகிகள் மத்தியிலான பதற்றமும் குஜராத் 2022 தேர்தலுக்கு அப்பாலும் அவர்களுக்கு என்னவோ திட்டமிருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன.

ஆம். குஜராத்தை பரிசோதனைக் கூடமாக்கி பாஜக மற்றும் மோடி முகாம் கண்டடையும் முடிவுகள், அதன் கட்சி மற்றும் ஆட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க இருக்கின்றன.

என்றென்றும் முதல்வர் மோடி

டெல்லியில் கோலோச்சினாலும் தாய் மண்ணான குஜராத்தில் கால் வைக்கும்போதெல்லாம் மோடி நெகிழ்ந்து விடுவார். “புனித யாத்திரை வந்திருப்பதாக உணர்கிறேன்” என்று அவர் அப்போது சொல்வதில் மிகையில்லை. தனது ஆஸ்தான சகா அமிஷ் ஷாவின் கொள்கைக்கு மாறாக அப்போது குஜராத்தியில் மட்டுமே மோடி பேசுவார். பாதுகாப்பு கெடுபிடிகளை தளர்த்திக்கொண்டு சாமானியர்களோடு கைகுலுக்குவார். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளை பெயரிட்டு நலம் விசாரிப்பார். 1995-க்குப் பிறகான குஜராத் பாஜக ராஜ்ஜியத்தில், புத்தாயிரத்துக்கு அப்புறம் அங்கே மோடிதான் முதல்வர். செங்கோட்டையில் கொடியேற்றி முழங்கியபோதும் குஜராத் கோட்டைக்குள்ளான அனைத்தும் மோடியின் கண்ணசைவிலேயே இன்றும் ஆட்பட்டிருக்கின்றன.

குஜராத் முதல்வர் நாற்காலியில் இப்போதும் மோடியே அமர்ந்திருக்கிறார். விஜய் ரூபானி போன்ற பொம்மைகள் அந்த நாற்காலியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தூக்கியடிக்கப்படுவார்கள். அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும் சாதாரணம். பிரதமர் என்ற முள்கிரீடத்தைவிட குஜராத் முதல்வர் என்ற ஆலிவ் இலைகளை சூடிக்கொள்வதில் மோடிக்கு ஆத்ம திருப்தி உண்டு. அதற்கு உறுத்தலாக இருந்ததாக, மோடியின் குஜராத் முதல்வர் ஆட்சிக் காலத்தில் அவர் மீது விழுந்த கறைகளையும் தற்போதைய டெல்லி சவக்காரம் போட்டு நீக்கிவிட்டார்.

தன் மனதுக்கு நெருக்கமான தாய் மண்ணோடும் மடியோடும் பிணைந்திருப்பதை, அதன் மகத்தான தேர்தல் வெற்றியிலும் அடையாளம் காண்கிறார். அந்த வகையில் மோடி படைக்கு இந்த முறையும் குஜராத் வெற்றி முக்கியமானது. நவ.3 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருந்த நெருக்கத்தில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடிக்கான நலத்திட்டங்கள் குஜராத்துக்கு அறிவிக்கப்பட்டன. அரசுக்கு போட்டியிடும் வகையில் அம்பானி, அதானி, வேதாந்தா, டாடா என தேசத்தின் பெரும் கார்ப்பரேட்டுகள் பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை அங்கே முன்னெடுத்து உள்ளன.

குஜராத்: பாஜகவின் பரிசோதனைக்கூடம்

குஜராத் மாநிலத்தில் மோடி கண்ட வளர்ச்சியே அவரை டெல்லிக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது. அப்போது தொடங்கி தனது தேசிய அளவிலான அரசியலுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் குஜராத்தையே பரிசோதனை களமாக்கி வருகிறார் மோடி. மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அப்பாலான அரசியல் கணக்குகள் இவை. பாஜகவுக்கான ஓட்டு வங்கியை அடையாளம் காண்பதுடன் அதை நோக்கி அடியெடுப்பது, யாரை வெறுப்பது எவரை அரவணைப்பது என்பதான சமூக அடிப்படையிலான நுணுக்கங்களை நிர்மாணிப்பது, அடையாள அரசியலுக்கான அடிப்படை கட்டுமானம் ஆகியவற்றுடன் தனிப்பெரும் தலைமைக்கான மாயைகளை நெய்வது என தனித்துவமாய் குஜராத்தில் பரிசோதிக்கப்பட்ட பல பால பாடங்கள் அதன் தேசாந்திர பயன்பாட்டுக்கும் உதவக்கூடும்.

இமாச்சல் பிரதேசத்தில் பாஜக முன்னெடுத்த ‘டபுள் இஞ்சின்’ பிரச்சாரம் இனி அனைத்து மாநில தேர்தல்களிலும் எதிரொலிக்கும். மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியையே மாநிலத்திலும் தேர்வு செய்தால் குஜராத்தைப் போல பலனடையலாம் என்பதை டபுள் இஞ்சின் சூத்திரமாக வகுத்திருக்கிறார்கள். கட்சிகளை உடைப்பது, ஆட்சிகளை கவிழ்ப்பது ஆகியவற்றைவிட இம்மாதிரியான வியூகங்களே நிரந்தரமாக பயனளிக்கும் என்பதை பாஜகவினர் லேட்டாக உணர்ந்திருக்கின்றனர். ஆட்சிக்கு மட்டுமல்ல களம் காணும் கட்சியினருக்கும் குஜராத் அளிக்கும் சமிக்ஞைகள் ஏராளம்.

கட்சிக்கும் ஆட்சிக்கும் தங்களை அர்ப்பணிக்கும் நிர்வாகிகளை எந்த விலை கொடுத்தாவது பாஜக காப்பாற்றும் என்பதற்கு கோத்ரா வழக்கு போன்ற அண்மை உதாரணங்கள் அதிகம். இதன் மறுபக்கத்தில் பாஜகவை நிராகரிப்பவர்களுக்கான அச்சமூட்டும் எச்சரிக்கைகளும் ஒளிந்திருக்கின்றன. தேசத்தின் தனிப்பெரும் வளர்ச்சிக்காக மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை டம்மியாக்கி மத்தியில் ஒற்றை அதிகாரத்தை நிறுவும் கனவுக்கும், மற்றுமொரு புதிய இந்தியாவை பெற்றெடுக்கும் தினவுக்கும் குஜராத் ஆய்வக முடிவுகள் பாஜகவுக்கு உதவலாம்.

2024 மக்களவை வெற்றிக்கு அச்சாரம்

குஜராத்தின் தேர்தல் வெற்றி என்பது பாஜவினர் அறிந்த ஒன்று. அதனை மகத்தான வெற்றியாக சமைக்கவே அனைவரும் இத்தனை மெனக்கிடுகிறார்கள். 2017 தேர்தலிலேயே குஜராத்தில் பெரும் வெற்றியை எதிர்பார்த்து ஏமாந்து போனது பாஜக. மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற, 77 இடங்களுடன் பழிப்பு காட்டிய காங்கிரசை பாஜக ரசிக்கவில்லை. ஓட்டு வங்கியிலும் பாஜகவின் 49.1% என்பதற்கு, 41.4% என நெருக்கமாய் மிரட்டுகிறது காங்கிரஸ். கால் நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத்தை ஆளும் பாஜகவின் வெற்றி அபரிமிதமாக உயர வேண்டும் என்பதே பாஜக தலைவர்களின் அவா.

பாஜக - காங் இடையிலான வழக்கமான மோதல், ஆம் ஆத்மி கட்சியின் வரவால் மும்முனையாகி உள்ளது. ஆம் ஆத்மி வழக்கம்போல பாஜக எதிர்ப்பு ஓட்டுகளையும், காங்கிரஸ் கூட்டுக்குள்ளுமாக மட்டுமே வளைக்கும் என்பதால் பாஜக நிர்வாகிகள் மகிழ்ந்திருக்கின்றனர். ஆனபோதும் 130-க்கும் மேலான இடங்களை வெல்ல வேண்டும் என்ற கட்சித் தலைமையின் இலக்கை நிறைவேற்றத் தடுமாறுகிறார்கள். உண்மையில் பாஜகவின் இலக்கு அதற்கும் அப்பாலிருக்கிறது. 1985 தேர்தலில் காங்கிரஸின் 149 வெற்றியை சமன் செய்தால் மட்டுமே, காங்கிரசுக்கு மாற்றான பாஜகவின் எழுச்சி என்பது அர்த்தமுள்ளதாகும்.

காங்கிரஸ் கட்சிக்கே உரிய நிரந்தர வாக்கு வங்கி, சிறுபான்மையினர், பழங்குடி மற்றும் பட்டியலினத்தவர் வாக்குகளை கவர்வது பாஜகவுக்கு பெரும் சவாலாக நிற்கிறது. மறுபக்கம், இலவசங்கள் அறிவிப்பை தூண்டிலாக்கும் ஆம் ஆத்மிக்கு பெருகும் ஆதரவும் பாஜகவை உறுத்துகிறது. காங்கிரசின் சரிவு திண்ணம் என்றாலும், அந்த ஓட்டுகளை ஆம் ஆத்மி அபகரிக்காது வென்றெடுக்கவே பாஜகவினர் திணறுகிறார்கள். அவ்வாறு குஜராத்தில் ஈட்டும் வெற்றி 2024 மக்களவை தேர்தலுக்கான அச்சாரமாக அமைய வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு.

மத்தியில் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் புதிய கூட்டணிகள் மட்டுமன்றி தொடர்ச்சியாக இருமுறை ஆட்சியிலிருந்ததில் எழும் இயல்பான அதிருப்திகளை முனை மழுங்கச் செய்வதற்கு புதிய அலை பாஜகவுக்கு அவசியமாகிறது. ஒரு சுனாமிக்கு வித்திடும் கடலடி நிலநடுக்கமாக குஜராத் பெருவெற்றி அமைய வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. இந்த வெற்றியை அச்சாரமாக கொண்டே 2024 மக்களவைத் தேர்தலுக்கு பாஜக அடியெடுக்கும். குஜராத் பொதுக்கூட்டங்களில் முழங்கும் பாஜக தலைவர்கள் எவரும் முதல்வர் பூபேந்திர படேல் பெயரையும் சாதனைகளையும் சொல்லி வாக்கு கேட்பதில்லை. குஜராத்திகள் அனுபவிக்கும் மத்திய - மாநில அரசுகளின் அனுகூலங்களை விளக்கி மோடி துதி பாடியவாரே வாக்குக் கேட்பதே இதற்கு சாட்சி.

சொல்லியடிக்குமா மோடி 3.0?

எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல உட்கட்சியில் மோடி -அமித் ஷா முகாம் தம்மை தக்கவைத்துக்கொள்வதற்கும் இந்த அலை அவசியமாகிறது. கட்சியின் லகானை கையில் வைத்திருக்கும் சங் பரிவார் அமைப்புகளின் அதிருப்திக்கு பாஜக ஆட்சியாளர்கள் ஆளாவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. முக்கிய முடிவுகளில் பாஜகவும், பரிவாரங்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளில் தடுமாறுகின்றன. ஆர்எஸ்எஸ் போன்றவற்றில் அதன் சித்தாந்தமே தலைமை என்பதால் அவற்றை திருப்திபடுத்த மோடி அடுத்த விஸ்வரூம் எடுப்பது அவசியமாகிறது.

மூன்றாம் முறையும் மோடியே பிரதமர் வேட்பாளர் என்பதில் உடன்படுவதாக வெளியே காட்டிக்கொண்டாலும் தேசிய கட்சிக்கே உரிய உள்ளடிகள் பாஜகவையும் தேர்தல் நெருக்கத்தில் படுத்தி எடுக்கலாம். இதற்கும் குஜராத் களமே சாட்சி. டெல்லி தலைமையின் சாட்டைக்கு வழக்கமாய் பணியும் மாநில தலைவர்கள், இம்முறை தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக காட்டியிருக்கிறார்கள். சீட்டு கிடைக்காத தலைகளுக்கு சுயேட்சையாக களமிறங்கும் துணிச்சல் எங்கிருந்து வந்ததது என்ற ஆச்சரியம் அமித் ஷா அணுக்கர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

கட்சியை பின்னிருந்து இயக்குவோர், கட்சியின் உள்ளிருந்து இயங்குவோருக்கு அப்பால் மோடிக்கும் தனிப்பட்ட வகையில் ஒரு கணக்கு இருக்கிறது. தனது அரசியல் பரம வைரியான ’நேரு’க்கு நேர் நிற்க அவருக்கும் மோடி 3.0 வெற்றி அவசியம். ஜவஹர்லால் நேருவுக்கு பின்னர், தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் நாற்காலியை அலங்கரித்த வரலாற்று பெருமைக்கு மோடியும் ஆளாக வேண்டும். இவற்றுக்கு அப்பால் மோடி - அமித் ஷா தயாரித்திருக்கும் ஒற்றைத்துவம் அமல்படுத்தலுக்கும் மோடி 3.0 முக்கியமாகிறது.

ஒரே தேசத்தின் கல்வி, மொழி, அதிகாரம் என சகலத்திலும் ஒருமித்த ஒரே வகையறாவை கட்டமைக்க மிருக பலத்துடனான பெரும்பான்மையை எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போல, சீனா ரஷ்யா பாணியில் இந்தியாவை ஒற்றை வெண்கொற்றக்குடையின் கீழ் கொண்டு வருவதே பாஜகவின் இறுதி இலக்கு. வரலாற்றையும் அரசியலமைப்பையும் திருத்தி எழுதுவது, தொலைநோக்கில் சமரசமற்ற வல்லரசு தேசத்தை கட்டமைப்பது ஆகியவற்றுக்கும் மோடி 3.0 மூலம் முரசறைய இருக்கிறார்கள்.

மோடி 3.0 புதிய வரலாற்றை எழுத குஜராத்தின் மகத்தான வெற்றிக்கு காத்திருக்கிறார்கள். பிசகினால் அதுவே பாஜகவின் சரிவுக்கும் முன்னுரை எழுதும் என்பதையும் பாஜகவினர் உணர்ந்தே இருக்கிறார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in