ஜவுளி, காலணி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்திடுக!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
ஜவுளி, காலணி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்திடுக!

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.இ.ஜவாஹிருல்லா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் ஜவுளி துறையை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஏற்கெனவே, நூல் விலை ஏற்றத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு பேரிடியாக ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் இன்று ஒருநாள் அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கடை அடைப்பு காரணமாக ரூ. 50 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது. அதேபோல் காலணி தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் சூழல் உருவாகிவருகிறது.

சிறு, குறு தொழில்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமெனில் வரி விதிப்பு குறைக்கப்பட வேண்டும். எனவே, ஒன்றிய அரசு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஜவுளித் துறை, காலணி சார்ந்த பொருட்களுக்கும் விதிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.