'இந்த மண்ணைப் போல மனதும் குளிர்ச்சி அடைந்துள்ளது': தென்காசி அரசு விழாவில்  முதல்வர் ஸ்டாலின் பேச்சு

'இந்த மண்ணைப் போல மனதும் குளிர்ச்சி அடைந்துள்ளது': தென்காசி அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தென்காசி மாவட்டத்தில் ரூ.34.14 கோடி மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.22.20 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தென்காசிக்கு வந்த உடனே இந்த மண்ணைப் போல மனதும் குளிர்ச்சி அடைந்துள்ளது. எப்போதும் லேசான தூறல், சாரல் மழையாகப் பெய்து வருவதைப் பார்க்கும் போது சென்னை போன்ற வெப்பமான நகரத்திலிருந்து வரும் என்னைப் போன்றோருக்கு இது மிக இதமானதாக இருக்கும். ஆண்டு தோறும் சாரல் விழாவை அரசு கொண்டாடி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் மாவட்டம், குறிஞ்சி, மருதம், முல்லை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய குற்றாலம் இருக்கக் கூடிய மாவட்டம் தென்காசி. அதிகமாக அருவிகள், அணைகள் இருக்கக் கூடிய மாவட்டம். மொத்தத்தில் எழில் கொஞ்சக் கூடிய மாவட்டம் இந்த தென்காசி. வீரத்தின் விளைநிலமாக இருக்கக் கூடிய பூலித்தேவன் வாழ்ந்த மண் இது.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக தென்காசி மக்களுடைய கோரிக்கைகள் சிலவற்றை என்னிடம் தெரிவித்தார்கள். உடனடியாக அதிகாரிகளை அழைத்து நான் பேசினேன். அதில் சிலவற்றை நிறைவேற்றித்தருவதற்காக அறிவிப்பை இந்த மேடையில் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தென்காசி மாவட்டத்தின் முக்கிய இணைப்புச் சாலையாக இருக்கும் புளியங்குடி-சங்கரன்கோவில் நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். புதிதாக அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திற்கு புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

துரைசிங்கபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பனையூர், கூடலூர், துரைசிங்கபுரம் சாலை மேம்படுத்தப்படும். தென்காசி குற்றாலம் பகுதியில் இருக்கக் கூடிய இலாத்தூர் பெரிய ஏரி முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தளமாக 10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

சிவகிரி மற்றும் ஆலங்குளம் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும். ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ராமநதி, ஜம்பு நதி திட்டங்களுக்குக் கடந்த ஆட்சியில் முறையான அனுமதி அளிக்கப்படாததால் திட்டப் பணிகள் கிடப்பிலேயே இருந்து வந்தது. திமுக ஆட்சி அமைந்தபின் ஒன்றிய அரசின் வனத்துறையினரிடம் முறையான அனுமதி பெறப்பட்டு இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் ” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in