தமிழகத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகள்: மு.க. ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகள்: மு.க. ஸ்டாலின் பெருமிதம்

“திமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில்துறை சார்பில் 6 தொழில் முதலீட்டு மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். அந்த மாநாடுகள் மூலமாக 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது ” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சென்னை, நந்தம்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “அனைத்துத் துறைகளுமே இன்று முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது. அதில் சிறு, குறு, நடுத்தர தொழிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. 1,240 தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. தொழில் புரிய எளிதான மாநிலங்களில் 14-வது இடத்திலிருந்து தமிழ்நாடு தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்து இந்த நிதி ஆண்டு இறுதியில் இரண்டு மிகப்பெரிய மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, வட்டார அளவிலான புத்தொழில் மையங்களை மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அவர்கள் தொழில் சார்ந்த சவால்களைச் சந்திக்க பயிற்சிகள் அங்கு அளிக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொழில் காப்பகங்கள் இயங்கி வருவதாக தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து புத்தொழில் காப்பகங்களையும் உலகத் தரத்திற்கு உயர்த்தக் கூடிய நோக்கத்தில் நாம் செயல்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில்துறை சார்பில் 6 தொழில் முதலீட்டு மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். அந்த மாநாடுகள் மூலமாக 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது ” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in