`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்'- பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்

`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்'- பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்

“வட இந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்ற வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் 75-வது ஆண்டு விழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசைத் துறை சேவைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்குக் கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதுபோல் மிருதங்க வித்வான் உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமனுக்கும் கௌவர டாக்டர் பட்டத்தை  மோடி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “குஜராத்தில் பிறந்து, ஒற்றுமையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, இந்தியத் தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தி அடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாடு வந்த காந்தியடிகள் தமிழை விரும்பி கற்றவர். தமிழில் கையெழுத்திட்டவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழை கற்ற வேண்டும் என்று சொன்னவர். இவை அனைத்திற்கும் மேலாக உயர் ஆடை அணிந்து அரசியலுக்கு வந்த அவரை அரையாடை கட்ட வைத்த மண் இந்த தமிழ் மண். வட இந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்ற வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். அத்தகைய காந்தி பெயரில் நடக்கும் பல்கலைக் கழக விழாவில் இந்த விழா நடைபெறுகிறது.

மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதனை மேலும் வலிமைப் படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. பெண்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5 சதவீத விழுக்காடு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலங்களும் உன்னிப்பாகக் கவனிக்கும் திட்டங்களாக அவை அமைந்துள்ளன. சமூகத்திற்குச் சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் சிந்தனைக்கு ஏற்க முற்போக்கு சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன்.

யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி. அத்தகையை கல்வியை ஒன்றிய அரசு மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது, கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. எமர்ஜென்சியின்போதுதான் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in