இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும் வயிற்றெரிச்சலாகவும் உள்ளது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும் வயிற்றெரிச்சலாகவும் உள்ளது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

”இந்திய அளவில் கல்வி, தொழில்துறை, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் தமிழ்நாடு முன்னே இருக்கிறது. திமுக அரசு ஏற்பட்டதால் அமைந்த பயன்கள் இவை. இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும், வயிற்றெரிச்சலாகவும் உள்ளது” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் சார்பாக ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ”தமிழர்கள் பெரும்பான்மையானோர் வாழும் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நாம் பத்து ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. போராடியும், பேசியும், எழுதியும், உயிரைக் கொடுத்தும், ரத்தம் சிந்தியும், மக்களவையில் குரல் எழுப்பியும், சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தும் போராட வேண்டியிருந்தது. அத்தனை போராட்டங்களை சந்தித்தும் தமிழ்நாடு என்ற பெயர் எளிதில் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் அமைந்த காரணத்தால்தான் தமிழ்நாடு என்னும் பெயர் நமது மாநிலத்திற்குக் கிடைத்தது. திமுக ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் இன்று வரையில் தமிழ்நாட்டிற்கு இந்த பெயர் சூட்டப்படாமலேயே இருந்திருக்கும். தமிழர்கள் வாழும் நிலப்பரப்பை ஒன்றிணைத்து அதற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய இயக்கம் திராவிட இயக்கம்.

இந்தியாவில் உள்ள நூறு தலைசிறந்த கல்லூரிகளில், 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்திய அளவில் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி 9.22 சதவீதமாக உள்ளது. தொழில்துறை, ஏற்றுமதி, அதிக வரி செலுத்தும் மாநிலம் என அனைத்திலும் முன்னே இருக்கிறோம். திமுக அரசு ஏற்பட்டதால் அமைந்த பயன்கள் இவை. இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும், வயிற்றெரிச்சலாகவும் உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவங்கள் நமக்கு வருத்தத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் மாணவர்களை தங்களது சொந்த பிள்ளைகளாக நினைத்துப் பயிற்றுவிக்க வேண்டும். சட்டத்திற்கு மாறாகச் செயல்படுவோர் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன். இந்த சோகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் சட்ட விரோதமாக நடந்து கொண்டுள்ளார்கள். வன்முறைகள் வளர்ச்சிக்கு எதிரானவை என்பதை அவர்கள் உணர வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in