கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 2,000 கோடி சேமிப்பு செய்த பெண்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 2,000 கோடி சேமிப்பு செய்த பெண்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் இலக்கு என முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில் 2021-2022 மற்றும் 2022-2023-ம் நிதி ஆண்டுகளில் மாநிலங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள், எனது செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள், சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் 60 அறிவிப்புகள், மாவட்ட ஆய்வு பயணங்களின் போது வெளியிட்ட 77 அறிவிப்புகள், எனது உரைகளின் வாயிலாக 46 அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கையில் 255 அறிவிப்புகள், வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 37 அறிவிப்புகள், மானியக் கோரிக்கைகளின் பொது அமைச்சர்களால் 2,425 அறிவிப்புகள் என மொத்தம் 3,337 அறிவிப்புகள் தமிழக அரசால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிங்காரச் சென்னை 2.0 மாநில நிதிக்குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதிஉதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து 7,388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16,390 கி.மீ. சாலைகளும் படிப்படியாக முன்னேற்றப்படும்.

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கரோனா பெருந்தொற்று காலத்திலே பெரிதும் பாதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை 2021-22 காலத்தில் நாள் ஒன்றுக்கு 70 லட்சமாகக் குறைந்தது. இதனால் போக்குவரத்து நிதிநிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டது. போக்குவரத்தைச் சீர் செய்த பிறகு நாள் ஒன்றுக்கு 1 கோடியே 70 பேர் பயணம் செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் விதமாக நாள் ஒன்றுக்குச் சராசரியாக 44 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இதற்காக 7,105 சாதாரண நகரக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த புள்ளி விவரங்களின் படி 2,000 கோடி ரூபாய் பணம் மகளிருக்குச் சேமிப்பாக மாறியுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்” என்றார்.

500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள ஆயிரம் பேருந்துகளைப் புதுப்பித்திடவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன். ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு 2213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சாரப் பேருந்துகளை வாங்கவும், உலக வங்கி உதவியோடு மேலும் 1000 பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in