`சமாதானம் அடைய நான் தயாராக இல்லை'- கலெக்டர், எஸ்பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கறார் உத்தரவு

`சமாதானம் அடைய நான் தயாராக இல்லை'- கலெக்டர், எஸ்பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கறார் உத்தரவு

”ஒருவர் போதைப் பொருளை பயன்படுத்தி வீழ்ந்து விடுவதால் சமூகத்தில் என்ன பிரச்சினை என்று கேட்கக் கூடாது. போதைப் பொருள்தான் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைந்துவிடுகிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “போதைப் பொருட்கள் நம் மாநிலத்திற்குள் நுழைவதையும், பரவுவதையும், விற்பனையாவதையும், பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும். புதிதாக ஒருவர் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி விடாமல் பாதுகாத்திட வேண்டும்.

இந்த உறுதியை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் எடுத்துக் கொள்ள வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட, மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் குறைவுதான் என்று சமாதானம் அடைய நான் தயாராக இல்லை. ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையானாலும் அது நமக்கு அவமானம் தான். எல்லாவற்றிலும் வளர்ந்து வரும் தமிழ்நாடு போதைப் பொருள் போன்ற எதிர்மறையான விஷயத்திலும் வளர்ந்துவிடக் கூடாது.

போதைப் பொருளை பயன்படுத்துவதற்கு ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது. அந்த காரணத்தில் பொருள் எதுவும் இல்லை. படிப்பு வரவில்லை, மனக் கவலை ஏற்படுகிறது, வாழப்பிடிக்க வில்லை இப்படி ஒரு காரணங்களை சொல்லிக் கொள்கிறார்கள். இவை அனைத்தும் கதைக்கு உதவாத காரணங்கள்தான். கோடிக்கணக்கானவர்கள் தன்னம்பிக்கையை வைத்து வாழும் போது ஒரு சிலர், போதையின் பாதையில் தீர்வு கிடைக்கிறது என்று சொல்வது கோழைத்தனம். போதை என்பது பயன்படுத்துபவர்களின் தனிப் பிரச்சினை அல்ல. ஒருவர் போதைப் பொருளை பயன்படுத்தி வீழ்ந்து விடுவதால் சமூகத்தில் என்ன பிரச்சினை என்று கேட்கக் கூடாது. போதைப் பொருள்தான் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைந்துவிடுகிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in