உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது அடிப்படை உரிமை: இராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது அடிப்படை உரிமை: இராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டும் அல்ல; அடிப்படை உரிமை என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 2702 மாணவிகளுக்கு இளங்கலை பட்டமும், 473 மாணவிகளுக்கு முதுநிலைப் பட்டங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் முதல் மகளிர் கல்லூரி ராணிமேரி கல்லூரி. இதில் நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களைத் தலைநிமிர வாழ வைக்கட்டும். நீங்கள் கல்லூரியிலிருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதிலிருந்து விடைபெறவில்லை.

அந்த காலத்தில் 10 வயது குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். குழந்தை திருமணங்களைக் குற்றச் செயல் எனச் சட்டம் போட்டிருந்தோம். மதம், கலாச்சாரம் என்ற முட்டுக்கட்டைகளைக் கடந்துதான் நாம் இதை அடைந்திருக்கிறோம். இந்த அரங்கில் இன்று நாம் காணும் காட்சி நூற்றாண்டு காலம் போராட்டத்தால் வந்தது. உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டும் அல்ல; அடிப்படை உரிமை.

புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக இக்கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருப்பதாக எனக்குத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கல்லூரியின் படிக்க வரும் மாணவர்கள் இந்தக் கல்லூரியிலேயே தங்கி படித்துக் கொள்வதற்கு வசதியாக விடுதி ஒன்றை ஏற்படுத்தித் தரவேண்டும் எனக் கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கல்லூரி வளாகத்திலேயே விடுதி கட்டித்தரப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in