`பரந்தூர் விமான நிலையம் அமைவதில் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை'- பி.ஆர். பாண்டியன் அதிர்ச்சித் தகவல்!

`பரந்தூர் விமான நிலையம் அமைவதில் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை'- பி.ஆர். பாண்டியன் அதிர்ச்சித் தகவல்!

பரந்தூர் விமான நிலையம் அமைவதில் முதல்வருக்கு விருப்பமில்லை. மத்திய அரசிற்கும் விருப்பமில்லை என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் விமானநிலையம் அமைவது குறித்து அறிவிப்பு வந்ததிலிருந்து அப்பகுதியில் உள்ள 12 கிராமங்களும் கொந்தளிப்பில் உள்ளன. இந்நிலையில் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நலக் கூட்டமைப்பு சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைப்பதற்காக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இருக்கும் ஆத்தூர் டோல்கேட் பகுதிக்கு வந்தபோது காவல் துறையினர் அவரை தடுத்து கைது செய்து காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், “ பரந்தூர் விமான நிலையம் அமைவதில் முதல்வருக்கே விருப்பமில்லை எனத் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க தவறுவது யார்? காவல்துறையைக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளும், விவசாயிகள் சங்கத் தலைவர்களை வழியிலேயே மறித்து கைது செய்யச் சொல்லியது யார்? பரந்தூர் விமான நிலையம் அமைவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்ற தகவல் வந்து கொண்டே இருக்கிறது. திட்டமிட்டு இந்த விமான நிலையம் யாரோ ஒரு சில சுயநலவாதிகளால் அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் ஆட்டிப் படைப்பதாகத் தெரிகிறது. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான அவருடைய கொள்கைகளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

தேவை இல்லாமல் ஒரு குழப்பத்தை அவர் உருவாக்க வேண்டாம். காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கித்தான் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறதா என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். அரக்கோணம் விமானப் படைத் தளத்திற்கும் பரந்தூருக்கும் வெறும் 12 கி.மீ. தொலைவுதான் இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு விமான நிலையம் அமைய வேண்டும் என்றால் அது மாநிலத்தின் மத்தியில்தான் அமைய வேண்டும். பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் அது ஆந்திராவிற்கும், கர்நாடகாவிற்கும் பொருந்துமே தவிரத் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in