
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மீண்டும் திமுகவை நெருங்கிவருகிறார். அண்மையில் மதுரைக்கு வந்த அமைச்சர் உதயநிதி, மு.க.அழகிரி வீட்டிற்கே சென்று சந்தித்தார். உதயநிதியை வாசலுக்கு வந்து வரவேற்றார் மு.க.அழகிரி. இந்நிலையில் இன்று மு.க.அழகிரி வெளியிட்டிருக்கும் ட்விட் மீண்டும் அவர் திமுகவில் இணையும் வாய்ப்பை விளக்குவதாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, 2014-ம் ஆண்டு இதேநாளில் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் முதல் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பின்னரும் கட்சியை அவர் தொடர்ந்து விமர்சிக்கவே திமுகவில் இருந்து 2014 மார்ச் மாதத்தில் நிரந்தரமாகவே நீக்கப்பட்டார்.
அழகிரி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவர் இன்று ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,”ஆட்சிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம். விஸ்வாசம் அது என்றும் மாறாது” எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மு.க.அழகிரி, கட்சியில் மீண்டும் இணைவது குறித்து தலைமைதான் முடிவு செய்யும் எனப் பேசியிருந்தார். அதேபோல் மதுரைக்கு வந்தபோது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் போய் அழகிரியை சந்தித்தது உள்ளிட்ட விசயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் அவரது ஆதரவாளர்கள் மு.க.அழகிரி மீண்டும் விரைவில் திமுகவில் இணைவார் என்கிறார்கள்!