மக்களும் காவல்துறையின் நண்பனாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மக்களும் காவல்துறையின் நண்பனாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் வளர்ச்சி என்பது இருந்தாலும், சமூகப் பிரச்சினைகளையும் நாம் கவனித்தாக வேண்டும் எனச் சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சிறார் குற்றங்களுக்குத் தீர்வு காணும் வகையில் ‘சிற்பி’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “காவல் துறையை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். மக்களும் காவல்துறையின் நண்பனாக இருக்க வேண்டும். காவல் துறையும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாத நிலை ஏற்படும். அந்த வகையில் மக்களையும் காவல்துறையையும் ஒன்றிணைக்கக் கூடிய எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிற்பி என்ற திட்டத்தைத் தமிழ்நாடு காவல்துறை உருவாக்கி இருக்கிறது.

சென்னை மாநகரில் உள்ள 100 பள்ளிகளில் பள்ளிக்கு தலா 50 மாணவர்கள் பங்கேற்கக் கூடிய வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. சிறுவர்களை இளமைக் காலம் முதலே சமூகப் பொறுப்பு உள்ளவர்களாக மாற்ற இந்த திட்டம் பயன்படும். ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலை வாய்ப்பின்மை போன்றவை சிறுவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதற்குக் காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் வளர்ச்சி என்பது இருந்தாலும், இது போன்ற சமூகப் பிரச்சினைகளை நாம் கவனித்தாக வேண்டும். போதைப் பொருள் தடுப்பு, குற்ற நடவடிக்கைகளைத் தடுத்தல், ஆளுமைத் திறன் மேம்படுத்துதல், பொதுமக்களுடன் தொடர்பு, பெற்றோர்களை மதித்தல், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் போன்ற பண்புகளை அவர்களுக்கு உருவாக்கிக்க கொடுக்க வேண்டும். சிற்பி திட்டத்தின் மூலம் மாணவர்கள் இந்த செயல்திறனைப் பெறுவார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in