`ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்'- மலையாளத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்!

`ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்'- மலையாளத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்!

``இந்தியாவில் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என்பது சாத்தியமில்லை. வலிமையான மாநிலங்களைப் பெற்றிருப்பது வலிமைதானே தவிர, அது பலவீனம் அல்ல'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மலையாள மனோரமா நியூஸ் சார்பில் இன்று கான்க்லேவ் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதில் தனக்கு ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் காணொளி காட்சி வாயிலாக அந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது, “இந்தியா விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக்கூடியவராக முதல் பிரதமரான நேரு இருந்து வந்துள்ளார். பல்வேறு மொழிப் பேசும் மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்காக அவர் மொழிவாரி மாகாணங்களை உருவாக்கி கொடுத்தார். இந்தி பேச விரும்பம் இல்லாத மக்களிடம் இந்தி திணிக்கப்படாது என்று உறுதியளித்தார்.

அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தார். மதச்சாற்பற்ற மனிதராக இருந்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டினார். கூட்டாட்சி நெறிகளை அடிக்கடி பேசினார். முதலமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களே பல்வேறு தொகுப்புகளாக வெளியாகி இருக்கிறது.

இத்தகைய காரணங்களால்தான் இந்தியா 75 ஆண்டுகளாக வலிமையாக இருந்து வருகிறது. இந்தியா என்பது ஒரு தனி அரசு அல்ல. கூட்டாட்சிகளின் ஒன்றியம் இந்தியா. இந்திய அரசியலமைப்பு அப்படித்தான் சொல்கிறது. இந்தியாவில் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என்பது சாத்தியமில்லை. வலிமையான மாநிலங்களைப் பெற்றிருப்பது இந்தியாவிற்கு வலிமைதானே தவிர, அது பலவீனம் அல்ல. ஒரே நாடு, ஒரே மொழி என்பவர்கள் நாட்டிற்கு எதிரிகள். இத்தகைய கருத்துகளை நாம் ஒன்றிணைந்து பலமாக எதிர்க்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in